ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமாகும். இதன் மூலம்தான் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது. ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்தசோகை நோய் ஏற்படக்கூடும். இதனால் உடல் இயக்கத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வீர்கள் என்கிறார் மருத்துவர் நித்யா.
சிறுமிகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என பெண்களிடையே ஹீமோகுளோபின் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 12.3 கிராம் முதல் 15.3 கிராம் வரை இருப்பது ஆரோக்கியமானது. 12 கிராமுக்கு குறைவாக இருந்தால் அது கவனத்தில் கொள்ளவேண்டியது ஆகும்.
ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள்:
எலும்பு மஜ்ஜை போதுமான ரத்த அணுக்களை உற்பத்திசெய்யாத நிலை, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி12 மற்றும் பி9 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஆகிய காரணங்களால் ஹீமோகுளோபின் அளவு குறையலாம். மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு இருந்தால் இரும்புச் சத்துக் குறைபாடு உண்டாகலாம். உடல் எடை குறைப்பு சமயங்களில் பேலன்ஸ் டயட் எடுக்காததால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்.
அறிகுறிகள்:
அதிகப்படியான சோர்வு, இதயத்துடிப்பு, மூச்சுத்திணறல், சரும மாற்றங்கள், முடி உதிர்தல், அரிப்பு போன்றவை ஆகும். ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து பார்ப்போம்.
1. வைட்டமின் - சி பழங்கள் : ஆரஞ்சு பழம், பெர்ரி மற்றும் திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் - சி சத்து நிறைந்துள்ளது. உணவு எடுத்து கொண்டதற்கு பின், ஆரஞ்சு பழங்களை எடுத்து கொள்வதால், சத்துக்கள் உடலில் சேர உதவுவதுடன், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
2. மாதுளை : மாதுளம்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைய உள்ளது. தொடர்ந்து மாதுளையை எடுத்து கொள்வோருக்கு, ரத்தத்தில் ஹீமோகுளோபின்
அளவு அதிகரிக்கும்.
3. பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. பேரீச்சம்பழம் எடுத்து கொண்டால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
4. பீட்ரூட் : பீட்ரூட்டில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து, போலிக் அமிலம் உள்ளிட்டவை உள்ளன. உணவில் பீட்ரூட் எடுத்து கொள்வோருக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
5. பருப்பு வகைகள் : நிலக்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுத்து கொள்ளலாம்.
6. தர்பூசணி பழம் : தர்பூசணி பழத்தில் வைட்டமின் - சி, இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்க முயற்சிப்போர், தர்பூசணி பழத்தை எடுத்து கொள்ளலாம்.
7. பூசணி விதை : பூசணி விதையில், இரும்புச்சத்துடன், கால்சியம், மேக்னீசியம், மாங்கனீசு உள்ளன. உணவில் பூசணி விதைகளை சேர்த்து வந்தால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும்.
8. நெல்லிக்காய் தேனுரல்: குடல் பகுதியை சுத்தப்படுத்த கூடிய நெல்லிக்காய் தேனுரல், உலர்ந்த அத்திப்பழம் எடுத்து கொள்வது அவசியம். கரிசாலை கர்ப்பம் தேனோட கலந்து சாப்பிடும்போது ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.