தற்போதைய சூழலில் சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் இதில் பெரும் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், சர்க்கரை நோய் ஆராய்ச்சிக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம், இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நீரிழிவு உயிரிவங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உயிரியல் மாதிரிகளைச் சேகரித்து, செயலாக்கி, சேமித்து, விநியோகிப்பதன் மூலம் நீரிழிவு நோய், அதற்கான காரணங்கள், மாறுபாடுகள் மற்றும் நோய் தொடர்புடைய கோளாறுகள் போன்றவற்றை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உலகளவில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமாக சர்க்கரை நோயாளிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு சர்க்கரை நோயின் பரவலான தாக்கம் இருப்பினும், இந்த நோயைப் ஆராய்ச்சி செய்யும் வகையில் உதவக்கூடிய உயிரியல் மாதிரிகளின் பெரிய அளவிலான களஞ்சியங்கள் இந்தியாவில் இல்லை.
அதனால் தான் புதிய நீரிழிவு உயிரி வங்கி நிறுவப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் மாதிரிகளை சேமிப்பதன் மூலம், சர்க்கரை நோயின் பின்னணியில் உள்ள மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை ஆய்வு செய்வதற்கு வல்லுநர்களுக்கு உதவுகிறது. மேலும், தடுப்பு உத்திகள், மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கிறது.