இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் இசையமைப்பாளர் நிக் ஜோனாஸ் ஆகியோர் வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுள்ளனர்.
“நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுள்ளோம் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறந்த நேரத்தில், எங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துவதால், நாங்கள் மரியாதையுடன் தனியுரிமையை கேட்கிறோம். மிக்க நன்றி,” என்று பிரியங்கா எழுதி இருந்தார். இதே பதிவை நிக் ஜோனாஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது பிரியங்கா மற்றும் நிக்கின் முதல் குழந்தை. ஆனால் சோப்ராவும், ஜோனாஸும் தங்கள் குழந்தையின் பெயரையோ, பாலினத்தையோ வெளியிடவில்லை.
சோப்ராவும் ஜோனாஸும் 2017 ஆம் ஆண்டு மெட் காலா என்ற மாபெரும் பேஷன் நிகழ்வில் சந்தித்தனர். அங்கு அவர்கள் இருவரும் டிசைனர் ரால்ப் லாரனை (Ralp Lauren) பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இருவரும் நான்கு மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு 2018 இல், இந்தியாவில் திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தானின் உமைத் பவன் அரண்மனையில், கிறிஸ்தவ மற்றும் இந்து திருமண மரபுபடி, மூன்று நாட்கள் இந்த திருமண கொண்டாட்டம் நடந்தது.
சமீபத்தில் வேனிட்டி ஃபேர் இதழில் வெளியான சிறப்பு நேர்காணலின் போது, பிரியங்கா குடும்ப வாழ்க்கை பற்றி பேசியிருந்தார்.
கடந்த ஆண்டு 2021 நடுப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த நேர்காணல், கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் 39 வயதான பிரியங்கா, 2022 இல், சில மாற்றங்கள் மற்றும் குடும்பத்துடன் சில நேரங்களை எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார்.
நான் எப்போதும் தேனீ போல சுறுசுறுப்பாக வேலை செய்வேன். எனது முன்னுரிமை எப்போதும் அடுத்த வேலையாகதான் இருக்கும். ஆனால் என்னுள் இருக்கும் பெண், ஒரு சமநிலையை விரும்புகிறாள். நான் என் குடும்ப வாழ்க்கைக்காக ஏங்குகிறேன் என்று அவர் கூறினார்.
ஆனால் அதில் பிரியங்கா, ஜோனாஸுடன் ஒரு குடும்பத்தைத் தொடங்குவது குறித்து தான் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் சோப்ராவின் தாய், பேரக்குழந்தையை எதிர்பார்க்கிறாரா என்ற கேள்விக்கு; குழந்தைகள் எதிர்காலத்திற்கான, எங்கள் விருப்பத்தின் ஒரு பெரிய பகுதி. கடவுளின் கிருபையால், அது நடக்கும்போது, அது நடக்கும் என்று பிரியங்கா கூறியிருந்தார்.
இப்போது வாடகைத் தாய் மூலம் தாயான பிரியங்கா சோப்ராவுக்கு பல்வேறு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“