/indian-express-tamil/media/media_files/2025/06/17/j1ewHufx4CV2nfcbZlfw.jpg)
இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரகம் சாா்பில் தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில் என பிரசித்தி பெற்ற கோயில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்வதற்காக 'க்யூ ஆா் கோடு' ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் பெரியகோயிலில் கோயில் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பக்தா்கள், சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக நுழைவுவாயில், சன்னதிகள் முன்புறம் என 32 இடங்களில் நவீன வடிவில் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நுழைவுவாயிலில் வரைபடத்துடன் கூடிய தகவல் பலகையும் உள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் இடம்பெற்றுள்ள இந்தப் பலகைகள் மூலம் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் படித்து கோயில் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரகம் சாா்பில் தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் குறித்த தகவல்கள் எழுத்து மற்றும் ஒலி வடிவிலும், ட்ரோன் புகைப்படம், 3டி விா்சுவல் டூா் போன்ற வசதிகள் கொண்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான 'க்யூ ஆா் கோடை' தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலா பயணிகள் ஸ்கேன் செய்தால், கைப்பேசி மூலம் தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த 'க்யூ ஆா் கோடு' தஞ்சாவூா் பெரிய கோயிலில் ராஜாராஜன் நுழைவுவாயில் முன்புறம் அண்மையில் அமைக்கப்பட்டது.
இதை பக்தா்கள், சுற்றுலா பயணிகள் தங்களது கைப்பேசி மூலம் ஸ்கேன் செய்து, இக்கோயில் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருகின்றனா். மேலும், ட்ரோன் படங்களையும் பாா்க்கலாம்.
இது குறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் கூறியதாவது; இந்திய தொல்லியல் துறை திருச்சி சரகம் சாா்பில், தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல், கொடும்பாளூா் மூவா் கோயில், திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துாா் திருமலை நாயக்கா் அரண்மனை ஆகிய பகுதிகளில் 'க்யூ ஆா் கோடு' சிஸ்டம் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்தந்த சுற்றுலா தலத்தின் வரலாறு, அமைப்புகள் குறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளலாம். மேலும் ஒலி வடிவிலும் கேட்க முடியும். முதல் கட்டமாக ஆங்கிலத்தில் தகவல் உள்ளது. வரும் காலங்களில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.