/indian-express-tamil/media/media_files/2025/08/29/train-xy-2025-08-29-04-59-32.jpg)
குறிப்பிட்ட கிலோ எடைக்கு மேலே கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் அல்லது கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ரயில் பயணிகள் உடமைகளை எடுத்து செல்லும்போது அவற்றுக்கான எடை கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லை. இதனால், சில பயணிகள் அதிக சுமைகளை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் விதமாக, ரயில் பயணிகளுக்கு விமான நிலையங்களில் இருப்பதைப்போல் இனி பெட்டிகளுக்கான எடை வரம்பு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதிய, கடுமையான விதிமுறைகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம், ரயில் பயணிகளின் பெட்டிகள் மின்னணு இயந்திரங்கள் மூலம் எடை போடப்படும்.
இந்தத் திட்டம், நாட்டின் பெரிய ரயில் நிலையங்களான பிரயாக்ராஜ் சந்திப்பு, கான்பூர் மத்திய, மிர்சாபூர், துண்ட்லா, அலிகர் சந்திப்பு, மற்றும் எட்டாவா உள்ளிட்ட தேசிய தலைநகர் மண்டல (NCR) மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பெட்டி எடை வரம்பு மற்றும் அபராதம்
அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிக பாரம் கொண்ட பெட்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு பயண வகுப்பிற்கும் அனுமதிக்கப்பட்ட எடை வரம்புகள் பின்வருமாறு:
முதல் வகுப்பு ஏசி: 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.
இரண்டாம் வகுப்பு ஏசி: 50 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.
மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் படுக்கை வசதி: 40 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.
பொதுப் பெட்டி: 35 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.
அதேபோல, எடையைப் பொருட்படுத்தாமல் ரயிலுக்குள் இடத்தைத் தடுக்கும் பெரிய பெட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். இந்த மாற்றங்கள் நீண்ட தூரப் பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான பயண அனுபவத்தை அளிக்கும் என வட மத்திய ரயில்வேயின் பிரயாக்ராஜ் மூத்த கோட்ட வணிக மேலாளர் ஹிமான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார் என்று டைம்ச் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில் நிலையங்களின் மறுவடிவமைப்பு
அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், பிரயாக்ராஜ் சந்திப்பு ரயில் நிலையம் ரூ.960 கோடி செலவில் விமான நிலையம் போல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒன்பது மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் பெரிய காத்திருப்புப் பகுதிகள், அதிவேக வைஃபை, சூரிய சக்தி அமைப்புகள், மழைநீர் சேகரிப்பு, தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் டிஜிட்டல் தகவல் திரைகள் போன்ற உயர்தர வசதிகள் இடம்பெறும்.
மேலும், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ஒரே பிராண்ட் கொண்ட ஆடம்பர கடைகளும் திறக்கப்பட உள்ளன. இது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதுடன், ரயில்வேக்கு கூடுதல் வருவாயையும் ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜ் சந்திப்புக்குப் பிறகு கான்பூர் மற்றும் குவாலியர் போன்ற ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தின் கீழ் மறுவடிவமைக்கப்படும் என சுக்லா தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.