செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து உப்பு, சர்க்கரை பிராண்டுகளிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருக்கும் அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் நடத்திய "உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்" என்ற ஆய்வில் டேபிள் உப்பு, கல் உப்பு, கடல் உப்பு மற்றும் உள்ளூர் மூல உப்பு உட்பட 10 வகையான உப்பு, மேலும் ஆன்லைன் மற்றும் உள்ளூர் சந்தைகளில் இருந்து வாங்கப்பட்ட ஐந்து வகையான சர்க்கரை சோதனை செய்யப்பட்டது.
இதில் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளிலும், நார், துகள்கள், பிலிம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவு 0.1 மிமீ முதல் 5 மிமீ வரை இருந்தது.
குறிப்பாக அயோடைஸ்டு உப்பில், மல்டி கலரில் மெல்லிய நார் மற்றும் ஃபிலிம் வடிவத்தில் அதிகளவிலான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காணப்பட்டன.
ஆய்வு குறித்து டாக்ஸிக்ஸ் லிங்க் நிறுவனர், இயக்குனர் ரவி அகர்வால் கூறுகையில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் குறித்த தற்போதைய அறிவியல் தரவுத்தளத்திற்கு பங்களிப்பதே எங்கள் ஆய்வின் நோக்கம், இதனால் உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம், இந்த சிக்கலை ஒரு உறுதியான, கவனம் செலுத்தும் விதத்தில் தீர்க்க முடியும், என்றார்.
டாக்ஸிக்ஸ் லிங்க் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா கூறுகையில், நாங்கள் கொள்கை நடவடிக்கைகளைத் தூண்டுவதையும், மைக்ரோபிளாஸ்டிக்ஸுக்கு வெளிப்படும் அபாயங்களைக் குறைக்கக்கூடிய சாத்தியமான தொழில்நுட்பத் தலையீடுகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
எங்கள் ஆய்வில் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளிலும் கணிசமான அளவு மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது மனித ஆரோக்கியத்தில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் நீண்டகால உடல்நல பாதிப்புகள் பற்றிய அவசர, விரிவான ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறது, என்றார்.
/indian-express-tamil/media/media_files/Xd1qGI9MfIqzwkjaRERO.jpg)
உப்பு மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் செறிவு ஒரு கிலோ உலர் எடையில் 6.71 முதல் 89.15 துண்டுகள் வரை இருந்தது, என்று அறிக்கை கூறுகிறது.
ஆய்வின்படி, அயோடைஸ்டு உப்பில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அதிக அளவில் உள்ளது (ஒரு கிலோகிராமுக்கு 89.15 துண்டுகள்). ஆர்கானிக் கல் உப்பில் மிகக் குறைந்த அளவு (ஒரு கிலோகிராமுக்கு 6.70 துண்டுகள்) உள்ளது.
சர்க்கரை மாதிரிகளில், மைக்ரோபிளாஸ்டிக்ஸின் செறிவு ஒரு கிலோகிராமுக்கு 11.85 முதல் 68.25 துண்டுகள் வரை இருந்தது, அதிக செறிவு நான் ஆர்கானிக் சர்க்கரையில் காணப்படுகிறது.
மைக்ரோபிளாஸ்டிக் என்பது உலகளாவிய கவலையாக உள்ளது, ஏனெனில் அவை ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உணவு, நீர் மற்றும் காற்று மூலம் மனித உடலில் நுழையும்.
நுரையீரல், இதயம் போன்ற மனித உறுப்புகளிலும், தாய்ப் பால் மற்றும் பிறக்காத குழந்தைகளிலும் கூட மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
முந்தைய ஆய்வுகள், சராசரியாக ஒரு இந்தியர் ஒவ்வொரு நாளும் 10.98 கிராம் உப்பு மற்றும் சுமார் 10 ஸ்பூன் சர்க்கரையை உட்கொள்கிறார் என்று கண்டறிந்தது, இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read in English: All Indian salt and sugar brands have microplastics: Study
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“