2018 ஆம் ஆண்டிற்கான சாதனை மகளிர் பட்டியலை BBC வெளியிட்டுள்ளது.100 பெண்கள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 73ஆவது இடத்தில் இடம்பெற்றிருக்கும் பெண்மணியின் பெயர் விஜி. மற்றம் 99 இடங்களை பிடிக்க அந்த மகளிர் என்னென்ன சாதனைகளை செய்தனர் என்று தெரியவில்லை.
ஆனால், விஜி அந்த இடத்தில் இடம்பெற அவர் செய்த சாதனை அவருக்கானது மட்டுமில்லை. ஒட்டுமொத்த பெண்களுக்குமானது. சாதாரண தையல் கூலி தொழிலாளியான விஜி எப்படி சாதனை மகளிர் லிஸ்டில் இடம்பெற்றார்?அப்படி என்ன அவர் பெண்களுக்கு செய்து விட்டார்? என கேள்வி எழுப்புவர்களுக்கு இதோ அவரின் புரட்சி போராட்டம் சுருக்கமாக..
வேண்டும் ..வேண்டும்..கழிப்பிடம் வேண்டும்:
நம் ஊர்களில் நீங்கள் நன்கு கவனித்தால் தெரியும் பெரும்பாலான ஜவுளி கடைகள், ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட் போன்றவற்றில் அதிகமான பெண்களே பணியில் அமர்த்தப்படுவார்கள். குறிப்பாக ஜவுளி கடைகளில் பெண்களுக்கே முன்னுரிமை.
இதற்கு பின்னால் இருக்கும் காரணம் ஆயிரம். பெண்கள் பொறுப்பானவர்கள், புடைவைகளை பற்றி நன்கு தெரிந்தவர்கள், பெண்களுக்கு தேவையான கடைகளில் அவர்கள் இருந்தால் வசதியாக இருக்கும் என பல காரணங்களை கூறலாம்.
இப்படி ஜவுளி கடைகளில் பணிபுரியும் பெண்களுக்கு அந்த கடை நிர்வாகம் தனியாக முறையான கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா? என்றால் அது சந்தேகம் தான். இன்றளவும் பல கடைகளில் பணிபுரியும் பெண்கள் தேவைப்படும் போது இல்லை, ஆட்கள் யாரும் வராதபோது பொது கழிப்பிடங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பெரிய கடைகளில் இப்படி கழிப்பிடம் பிரச்சனை இல்லை என்றால், அவர்களுக்கு இருக்கும் வேறு பிரச்சனை நாள் முழுவதும் கடைகளில் நின்றுக் கொண்டே பணியாற்ற வேண்டும் என்பது தான். பெண்கள் எந்த காரணத்திற்காகவும் தரையிலோ, நாற்காலியிலோ அமரக் கூடாது. நாள் முழுவதும், சொல்லப்போனால் ஆண்டு முழுவதும் அவர்கள் நின்றுக் கொண்டே தான் வேலை செய்ய வேண்டும்.
அந்த 3 நாட்களில் இந்த இரண்டு பிரச்சனைகளை பெண்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று நீங்களே நினைத்து பாருங்கள்...
சாதனை மகளிர் விஜி:
இவர்களை பற்றி நினைத்து பார்த்து மட்டும் வேதனைப்படாமல் அவர்களுக்காகவே களத்தில் இறங்கி போராடியவர்களில் முதன்மையானவர் தான் விஜி. 50 வயதாகும் விஜி கேரளாவைச் சேர்ந்தவர். இவரும் தொழிலாளி வர்தகத்தை சார்ந்தவர் தான். ஆனால் 22 வயதிலேயே தனது தோழியுடன் சேர்ந்து பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்பணித்துக் கொண்டார்.
சிறு கடைகள்,சிறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் கடைகளில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும், அவர்களுக்கு கட்டாயம் கடைகளில் கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்று முழு மூச்சுடன் போராடினர். ஆரம்பத்தில் இவரின் பேச்சை மதிக்காத கடை உரிமையாளர்கள் சம்பளமும் கொடுத்து, கழிப்பிடம் கொடுத்து, நாற்காலி கொடுத்து வேலை வாங்க எங்களுக்கு என்ன தலையெழுத்து? என்று கூவினர்.
போராட்டத்தில் விஜி
ஆனால் அதே நேரத்தில் இவர்களின் தேவையில் நியாயம் இருக்கிறது என நினைத்த சில நல்ல மனம் படைத்த முதலாளிகள் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
ஆனாலும், இவர்களின் போராட்ட குரல் ஓயவில்லை.அப்போது தான் கேரளாவின் புரட்சி முதல்வரான பினராயி விஜயன் இவர்களின் தேவையை அதிகாரப்பூர்வமாக சட்டமாக்கினார்.
கேரளாவில் இனிமேல், கடைகளில் பணிப்புரியும் பெண்கள் நின்றுக் கொண்டே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.. என்றும் அவர்களின் நியாமான தேவைகளை உரிமையாளர்கள் செய்து தர வேண்டும் என்றும் அதை சட்டாமக திருத்தினார்.
விஜியின் போராட்டம் வெற்றி பெற்றது. பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் விஜியை அழைத்து தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர். அந்த வெற்றியின் முதல் படியாக இன்று அவர் பிபிசியின் சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
அடுத்தது என்னவென்று அவரிடம் கேட்டால், சிரித்துக் கொண்டே சொல்கிறார் “இன்னும் போராட்டம் ஓயவில்லை. ஆண்களுக்கு நிகராக பெண்களிடம் பணிச்சுமையை அளிக்கின்றனர். அதை தட்டி கேட்பதே என அடுத்த இலக்கு “ என்கிறார்.
உங்களுக்கான ஏதாவது தேவை இருக்கிறதா? என்று கேட்டால் “எனக்கு என்ன இருக்க போகிறது நான் கூலி தொழிலாளி தானே.. எனக்கு வரும் வருமானமே போதுமானது மன நிறைவுடன் இருக்கிறேன்” என்கிறார்.
விஜி வெறும் கூலி தொழிலாளி மட்டுமில்லை, கேரளாவில் வெற்றிக்கரமாக இயங்கி வரும் ’பெண் கூட்டு’ என்ற பெண்கள் அமைப்பினை நிறுவியர் ஆவர்.
இப்போது சொல்லுகள் விஜிக்கு BBC கொடுத்த அங்கீகாரம் சரியா? தவறா?