இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பாக சென்னை முதல் மலேசியாவின் பினாங்கு நகருக்கு தினசரி நேரடி விமானம் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முன்னதாக இண்டிகோ ஏர்லைன்ஸில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் லங்காவிக்கு நேரடி விமானம் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IndiGo introduces daily direct flights between Chennai and Penang
சென்னையில் இருந்து பினாங்கு செல்லும் பயணிகள் எண்னிக்கை அதிகரித்து வருவதால், இந்த புதிய வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் சுற்றுலாவிற்காக செல்லும் பயணிகளுக்காக இந்த பயண சேவை தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விலையும் குறைவாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை - பினாங்கின் பயணம் நேரம், 7 மணி நேரமாக இருந்த நிலையில், இப்புதிய சேவை மூலம் 4 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், பெங்களூரு மற்றும் கோலாலம்பூர் இடையேயான விமான சேவையை அதே தேதியில் மீண்டும் தொடங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.
மலேசியாவிற்கு அதிகளவில் சுற்றுலா செல்பவர்களின் நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் இருப்பதாகவும், இந்த புதிய சேவை மூலம் இருநாடுகளுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகள் வலுப்படும் எனவும் ஏர்லைன்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் இருந்து பினாங்குக்கு செல்பவர்களுக்கு சென்னையே மையமாக செயல்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா, “இந்தியாவில் இருந்து கோலாலம்பூர், லங்காவி மற்றும் பினாங்குக்கு 28 விமானங்கள் வாராந்திரமாக இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பினாங்கு, அதன் துடிப்பான கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்பட்ட ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக அமைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“