Inji Recipe In Tamil, Inji Thuvaiyal Tamil Video: நாம் தவற விட்டுக் கொண்டிருக்கும் பாரம்பரியங்களில் ஒன்று, துவையல். 30 ஆண்டுகளுக்கு முன்பு துவையல் இல்லாத சாப்பாடு இருக்காது. குறிப்பாக தேங்காய் துவையல். கொஞ்சம் கொஞ்சமாக துவையல் கலாசாரம் காலாவதியான நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழல் நம்மை மறுபடியும் உடல் நலன் குறித்த விழிப்புணர்வுக்கு தள்ளியிருக்கிறது.
Advertisment
இப்போது பலரும் சத்தான உணவுகளையும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியான உணவுகளையும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இஞ்சி துவையல் முக்கியமானது ஆகும். இது உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது. காய்ச்சல் உள்ளிட்ட நோய்களையும் அண்ட விடாது. சரி, இஞ்சி துவையல் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
Inji Thuvaiyal Tamil Video:: இஞ்சி துவையல்
இஞ்சி துவையல் செய்யத் தேவையான பொருட்கள்: இஞ்சி - 100 கிராம், உளுந்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன், நல்லெண்ணெய் - 1 ஸ்பூன், சிவப்பு மிளகாய் - 4, தேங்காய் - அரை கப், கருவேப்பிலை - சிறிதளவு, புளி - கால் துண்டு, வெல்லம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
இஞ்சி துவையல் செய்முறை :
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பை வறுக்க வேண்டும். பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும். கடைசியாக கருவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். பின்னர் சூடு போகும்வரை ஆறவிட்டு, மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.
பிறகு அதில் துருவிய தேங்காயை கொட்டி மீண்டும் அரைக்கவும்.இப்போது துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்க்கலாம். தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். எனினும் தாளிக்காமல் அப்படியே சாப்பிடுவதே ஒரிஜினல் துவையல்!
இதனை சாம்பார், மோர் குழம்பிற்கு பயன்படுத்தலாம். இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் சூப்பரான சைட் டிஷ்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"