திமுக தலைவரும் ,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இழப்பு அவரின் குடும்பத்தாருக்கு மாபெரும் இழப்பு என்பது எல்லோரும் அறிந்ததே.
கருணாநிதியின் நாற்காலி:
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரின் இறப்பு செய்தி அறிவிக்கப்பட்ட 7 ஆம் தேதி வரை மருத்துவமனையில் வாசலில் தலைவா வா.. சூரியனே எழு.. என்று முழுக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த தொண்டர்களும் அவரின் முகத்தை இறுதி ஊர்வலத்தில் பார்த்து தங்களை தேற்றிக் கொண்டனர்.
ஏன் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகளுக்கு கூட தாத்தா இறந்துவிட்டார் என்று புரிய வைத்து விடலாம். ஆனால் கருணாநிதியின் வருகைக்காக காத்திருக்கும் இந்த இரண்டு உயிர்களுக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் என்ன ஆறுதலை சொல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை.
எஜமான் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் கருணாநிதியின் வளர்ப்பு நாயும், அவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமந்துக் கொண்டிருந்த சக்கர நாற்காலியும் இப்போது தனிமையில் கிடக்கின்றன.
சக்கர நாற்காலியில் கருணாநிதி
கோபலப்புர இல்லத்தில் கருணாநிதியின் நாற்காலியும், அவருக்கு பூ போடப்பட்டு இருக்கும் படத்தை பார்த்தப்படியே படுத்திருக்கும் அவரின் வளர்ப்பு பிராணி புகைப்படமும் கல் நெஞ்சம் படைத்தவர்களை கூட அழ வைத்துள்ளது. கருணாநிதி அமர்ந்து செல்லும் சக்கர நாற்காலி எத்தனையோ தேர்தல் பிரச்சாரங்களையும், மேடைகளையும், சபைகளையும் கண்டுள்ளது.
தனது குடும்பத்தை விட கருணாநிதி அதிக நேரம் செலவழித்தது அந்த நாற்காலியின் தான். கருணாநிதி அமர்ந்திருப்பதால் அந்த நாற்காலி இவ்வளவு அழகாக தெரிகிறதா? அல்லது அழகான நாற்காலியை தனக்கென பிரத்யேகமாக செய்து கருணாநிதி அமர்ந்து வருகிறாரா? என்று கூட திமுக தொண்டர்கள் புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர்.
இந்த நாற்காலியில் அமர்ந்தப்படி தான் கருணாநிதி டெல்லி வரை பயணம் செய்துள்ளார். கருணாநிதிக்கும் நாற்காலிக்கும் இடையில் இருக்கும் அந்த பந்தம் பார்ப்பவர்களுக்கு மட்டுமில்லை அவருடன் இருப்பவர்களுக்கு கூட புரிந்து விடாது. இன்று அந்த நாற்காலி அதே கோபாலபுர இல்லத்தில் மூலையில் நின்றுக் கொண்டிருக்கிறது.
கருணாநிதியின் செல்லப்பிராணிகள்
கருணாநிதியின் வளர்ப்பு நாய்:
கருணாநிதிக்கு செல்லப்பிராணி என்றால் உயிர். அவரின் கோபாலபுர இல்லம் மற்றும் சிஐடி காலனியிலும் லாசா அப்ஸோ மற்றும் பக் வகை நாய்களை வளர்த்தார். அந்த நாய்கள் மீது கருணாநிதிக்கு அளாதியான அன்பு. கோபாலபுரம் இல்லத்தில் லாசா அப்ஸோ நாயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து பல தலைவர்கள் பிரமித்து கேட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/1-32.jpg)
கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கும் போது தினமும் ஒரு முறையாவது அந்த நாய்களை மடியில் வைத்து கொஞ்சுவாராம். வீட்டில் உள்ள டிவியில் கருணாநிதி பேச்சு அல்லது வீடியோ வந்தால் அந்த நாய்கள் உடனே ஓடிப்போய் டிவியில் தெரியும் கருணாநிதிக்கு முத்தம் இடும். தினமும் அந்த நாய்களுக்கு தனது கையால் உணவு அளிப்பவர் கருணாநிதி தான். ஒரு நாள் அவர் இல்லத்திற்கு வரவில்லை என்றால் அந்த நாய்கள் உணவு எடுத்துக் கொள்ளாதாம்.
ஆனால் தற்போது அவர் எப்போதுமே வீடு திரும்ப மாட்டார் என்ற செய்தியை அந்த நாய்களுக்கு பிரிய வைக்க மொத்த குடும்பமும் அவதிப்பட்டு வருகிறார்கள். கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்தவாறு அவரின் செல்லப்பிராணிகள் படுத்திருக்கும் புகைப்படமும் வார்த்தைகளால் சொல்ல முடியாத சோகத்தை பார்ப்பவர்களுக்கு தந்துள்ளன.