பிறந்த குழந்தையையும் பார்க்க செல்லாமல் தனது கடமையை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

வியக்க வைக்கும் உண்மை சம்பவம்...

By: August 12, 2018, 12:52:23 PM

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாள் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறியது எப்படி? வியக்க வைக்கும் உண்மை சம்பவம்…

கருணாநிதி மறைவு: 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காவேரி மருத்துவமனையில் காலமானார். அவர் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

Karunanidhi Funeral ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது

மறைந்த கருணாநிதியின் உடல் கடந்த 8ம் தேதி ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அரங்கிற்கு வந்தனர்.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களில் ஒருவர் தான் கார்த்திக்.

யார் இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கார்த்திக்:

சென்னை தீவுத்திடல் அருகே உள்ள குடிசைபகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். கடந்த 16 வருடங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இத்தனை வருடங்கள் இவர் முழு அர்பணிப்புடன் பணிப்புரிந்ததற்காக இவரை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பாராட்டியிருக்கிறார், மேலும் தமிழக முதல்வர் பழனிசாமி கையால் விருதும் வாங்கியிருக்கிறார். இதுவே அவரை ஊக்குவித்ததாக அவரே தெரிவிக்கிறார்.

இவரின் இந்த அர்பணிப்பை பற்றி அரசு பல்நோக்கு மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் வீ.ஆனந்தகுமார் மிகவும் பாராட்டி கூறியுள்ளார். அதில், அரசு மருத்துவமனையில் நடைபெறும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு நம்பத் தகுந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனராக கார்த்திக் இருந்து வருகிறார் என்று கூறினார்.

குறிப்பாக சமீபத்தில் குளோபல் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு 20 நிமிடங்களில் இதயத்தை கொண்டுவந்து சாதனை படைத்தவர் கார்த்திக். இதற்காக அவருக்கு தமிழக அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கார்த்திக் வாழ்வில் மறக்க முடியாத நாள் :

இவருடைய 27 வயதான மனைவி சத்யா, நிறைமாத கர்ப்பிணியாக எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இருந்தார்.

கடந்த 8ம் தேதி, அதாவது கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நாளில் அதிகாலை முதல் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் இருந்தார். ஊரே வெறிச்சோடி காணப்பட்டிருந்த நிலையில் தான் கார்த்திக் மனைவிக்கு அவரச உதவி தேவைப்பட்டது. சத்யாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டு கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு அதிகாலை 4.30 மணி அளவில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்த தகவல் கார்த்திக்கின் காதுக்கு எட்டியும், அவரால் மனைவி இருந்த மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. காரணம்… கருணாநிதி அஞ்சலி நிகழ்வில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பணி. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால், பலரும் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். அவர்கள் அனைவருக்கும் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.

கடமை தவறாமல் உழைத்த கார்த்திக்:

தான் பெற்ற குழந்தையும், மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, கார்த்திக்கிற்கு காத்திருந்தது சவாலான பணி. காயமடைந்த அனைவரையும் எவ்வித தயக்கமும் இல்லாமல், ஆம்புலன்ஸில் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். தன் குடும்பம் மட்டுமின்றி, சமூகத்தில் உள்ள பிறரைப் பற்றியும் அதிக அக்கறையும் கடமை உணர்வும் இருப்பதால் மனிதநேயத்துடன் செயல்பட முன்வந்ததாக கூறுகிறார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸில் கொண்டு சேர்த்ததால், பலரும் உயிர் பிழைத்தனர். இருப்பினும் கூட்டத்தில் சிக்கிய பலரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருடன் இருந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்ததோடு கடமை முடிந்தது என்று நினைக்காமல், பலியானவரின் உடலை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினார். அதிகாலை 4.30 மணிக்கு பிறந்த இவருடைய குழந்தையை பார்க்க இரவு 11 மணிக்கு மருத்துவமனைக்குச் சென்றார்.

கார்த்திக்கிற்கு கிடைத்த பாராட்டு:
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கார்த்திக்

சமூக அக்கறையுடன் பொதுநலன் கருதி கார்த்திக் பணியாற்றியதை அறிந்து ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையின் தொடர்பு அதிகாரி டாக்டர் வீ.ஆனந்தகுமார் உள்பட டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

கருணாநிதிக்கு இறுதி ஊர்வல வாகனம் ஓட்டியவர் பற்றி படிக்க : (கடவுளுக்கு செய்யும் திருப்பணி போல பக்தியுடன் ஓட்டினேன் : இறுதி ஊர்வல ஓட்டுனர் கலக்கம்)

தனக்கு குழந்தை பிறந்ததையும் பார்க்க செல்லாமல், அர்ப்பணிப்போடு பணியாற்றிய இவருக்கு சுதந்திர தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Inspiring story of ambulance driver

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X