தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளதாக சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையின் போது பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சர்வதேச பலூன் திருவிழாவை பொள்ளாச்சி மட்டுமின்றி, சென்னை மற்றும் மதுரையிலும் நடத்த சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி, "10-வது ஆண்டாக சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. இதுவரை பொள்ளாச்சியில் மட்டுமே இத்திருவிழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை சென்னை மற்றும் மதுரையிலும் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படவுள்ளது. அந்த வகையில், ஜனவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும், ஜனவரி 14 முதல் 16-ஆம் தேதி வரை பொள்ளாச்சியிலும், ஜனவரி 18 மற்றும் 19-ஆம் தேதி வரை மதுரையிலும் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் தாய்லாந்து, பெல்ஜியம், பிரேசில், வியட்நாம், ஜப்பான், பிரான்ஸ் உள்பட 9 நாடுகளைச் சேர்ந்த ராட்ச பலூன்கள் பங்கேற்கவுள்ளன" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“