ஒவ்வொரு ஆண்டும் ஆக.8-ம் தேதி சர்வதேச பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பூனைகளுக்கு ஏன் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றால், இந்த அழகான உயிரினங்களுக்கு நாம் எப்படி உதவலாம், அவற்றைப் பாதுகாக்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே. பூனைகள் பற்றிய முதல் வரலாற்றுப் பதிவு பண்டைய எகிப்து நாகரிகத்தில் காணப்பட்டது. எகிப்திய வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகே பூனைகள் மற்ற உலக நாடுகளில் பிரபலமடைந்தன. மேலும், ஆக.2020 முதல், பூனைகளின் நலனுக்காகச் செயல்படும் International Cat Care என்ற தொண்டு நிறுவனம், இந்த சர்வதேச பூனைகள் தினத்தை கவனித்துக் கொள்கிறது.
பூனைகளுடன் நேரம் செலவிட்டவர்கள், அவை தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும், அதிக கவனம் தேவையில்லை, அதேசமயம் ராணி போல் நடந்துகொள்ளும் என்று சொல்வார்கள். இந்தச் சர்வதேச பூனைகள் தினத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரப் பூனைகளில் ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். ஆம்! அதன் பெயர் நலா (Nala).
நலா சயாமிஸ்-டாபி கலப்பின பூனை. பார்க்க மிகவும் அன்பாகத் தெரியும் இது, கொஞ்சலை மிகவும் விரும்பும். சும்மா இருக்கும்போது குட்டித் தூக்கம் போடுவதுதான் இதற்கு மிகவும் பிடித்த வேலை. நலாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கமும் உள்ளது. அதன் ரசிகர்கள் எண்ணிக்கையைக் கேட்டால் நீங்கள் பொறாமைப்படலாம். உலகெங்கிலும் 4.4 மில்லியன் ஃபாலோவர்கள்! நலா உண்மையிலேயே மிகவும் பிரபலமானது. அதன் சமூக வலைதளப் பக்கத்தில், அதன் அழகிய புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான ரீல்கள் ஏராளம்.
வரிசிரி மேதாச்சித்திபான் என்ற பெண்மணிதான் நலாவை கலிபோர்னியாவில் உள்ள காஸ்டாய்க் விலங்கு காப்பகத்திலிருந்து தத்தெடுத்தார். முதல் பார்வையிலே நலாவை தத்தெடுக்க அவர் முடிவு செய்தார். ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது, “அன்றைக்கு பூனையை தத்தெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நலாவைப் பார்த்ததும், அதன் பெரிய நீல நிறக் கண்களை என்னால் எதிர்க்க முடியவில்லை. நான் அதை கையில் எடுத்தவுடன், அது முகத்தை நக்கியது. இது தற்செயல் நிகழ்வு அல்ல, அது நடக்க வேண்டியதுதான் என்று உணர்ந்தேன்."
2012-ல் வரிசிரி மேதாச்சித்திபான், நலாவுக்காக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார். அதன்பிறகு, நலாவின் பிரபலம் விண்ணை முட்டியது. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட பூனை என்ற கின்னஸ் உலக சாதனையையும் அது படைத்தது. அதன் புகழ் காரணமாக, நலா இப்போது ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒவ்வொரு பதிவிற்கும் மிகப்பெரிய தொகையைப் பெறுகிறது.
நலாவின் மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ. 840 கோடி ஆகும். அதன் பிரபலத்தால் 'Love Nala' என்ற வணிக நிறுவனமும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ், அதன் ரசிகர்கள் ரசிக்கக்கூடிய பல வகையான தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.