நீங்கள் ராமர் பக்தரா? இந்தியாவிலும், நேபாளத்திலும் உள்ள ராமரின் வாழ்விடங்கள் அனைத்திற்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் உள்ளதா? குறிப்பாக, எந்தவித சிரமங்களும், தடுமாற்றங்களும் இன்றி ஆன்மீக இடங்களுக்கு நிம்மதியாகச் சென்றுவர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம்!
ஸ்ரீராமாயண யாத்திரை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுலா, ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. அயோத்தியில் தொடங்கி, ஸ்ரீராமருடன் தொடர்புடைய நந்திகிராம், ஜனகபுரி, வாராணசி, பிரயாக்ராஜ், ஹம்பி என இறுதியாக ராமேஸ்வரத்தில் சுற்றுலா நிறைவு பெறுகிறது. மீண்டும் சுற்றுலாப் பயணிகள் டெல்லியில் கொண்டு வந்து இறக்கிவிடப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமரின் வாழ்விடங்கள் அனைத்திற்கும் 17 நாள்கள் ரயில் மூலமாக சென்று திரும்புவதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி செய்து கொடுக்கிறது.
இந்தியாவில் மிக முக்கிய ஸ்தலமாகப் பார்க்கப்படும் அயோத்தியா மற்றும் நேபாளத்தில் மிக முக்கிய ஸ்தலமாக இருக்கும் ஜனகபூரி ஆகிய இடங்களை உள்ளடக்கிய 8,000 கி.மீ. தொலைவுக்கு இந்த சுற்றுலா இருக்கும். இதற்கான முன்பதிவுகளை நீங்கள் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.
பயண வழித்தடத்தில் உள்ள முக்கிய புனிதத் தலங்கள்:
- அயோத்தி: ஸ்ரீராமர் பிறந்த புண்ணிய பூமி, பிரம்மாண்டமான புதிய ராமர் கோயில் தரிசனம்.
- ஜனகபூரி (நேபாளம்): சீதா தேவி அவதரித்த இடம். ராம் ஜானகி கோயில் நேபாளத்தின் கலாச்சார மற்றும் ஆன்மிகப் பொக்கிஷம்.
- சித்ரகூட்: ராமர், சீதை, லட்சுமணன் வனவாசத்தின் பெரும்பகுதியைக் கழித்த இடம். இங்குள்ள காட்சிகள் அமைதியையும், ஆன்மிக உணர்வையும் தூண்டும்.
- நாசிக்: ராமாயணத்தில் பஞ்சவடி என அறியப்படும் பகுதி, சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அறுத்த இடம், சீதையை ராவணன் கடத்திய இடம் எனக் கதைகளில் வரும் முக்கிய தலம்.
- ஹம்பி: கிட்கிந்தையின் அடையாளமாக இருக்கும் அஞ்சனேயா மலை, அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கிருந்துதான் சீதையைத் தேடும் பணி தொடங்கியது.
- ராமேஸ்வரம்: இலங்கை செல்லும் முன் ராமர் சிவபெருமானை வழிபட்ட ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி, இலங்கைக்குப் பாலம் கட்டப்பட்டதாக நம்பப்படும் இடம்.
ஒவ்வொரு இடத்திலும், ராமாயணக் கதையின் ஒரு பகுதி கண்முன்னே விரிவது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும். உள்ளூர் வழிகாட்டிகள் அந்தந்த இடங்களின் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை விளக்குவார்கள்.
கட்டணம் எவ்வளவு?
3 டயர் ஏசி ரயில் பெட்டிக்கு ரூ.1.17 லட்சம் வசூலிக்கப்படுகிறது. 2 டயர் ஏசி பெட்டியாக இருந்தால் ரூ.1.40 லட்சமாகவும், ஒரு டயர் ஏசி பெட்டிக்கு ரூ.1.66 லட்சமாகவும், 1 ஏசி பெட்டியில் தனியாக பயணிக்க ரூ.1.79 லட்சமாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 17 நாள்கள் இந்த சுற்றுப் பயணம் அடங்கும். இந்த ஆன்மிகப் பயணத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது ஐஆர்சிடிசி சுற்றுலா உதவி மையங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பகுதி கட்டண முறை (part-payment option) மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
பக்தர்கள் செலுத்தும் கட்டணத்தில் ரயில் பயணம் மட்டுமல்லாது ஹோட்டல்களில் ஏசி ரூமில் தங்குவதற்கான ஏற்பாடு, ரயில்களில் சாப்பாடு, வெளியிடங்களில் தரமான ஹோட்டல் (அ) ரெஸ்டாரண்ட்களில் சாப்பாடு, புனித தலங்களை பார்வையிட ஏ.சி. பஸ் பயணம், பயணக் காப்பீடு, சுற்றுலா வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும். சுற்றுலாவில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரயிலில் CCTV கேமராக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளனர், இது பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்கிறது. மேலும், பயணிகளுக்கு மருத்துவ வசதிகளும் வழங்கப்படும்.
எங்கு தொடங்குகிறது?
ஜூலை 25ஆம் தேதி டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது. இதற்காக பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதால் மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முதலில் ராம ஜென்மபூமி அமைந்திருக்கும் அயோத்தியா செல்லும். அங்குள்ள அனுமன் கோயில், பாரத் மந்திர் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட பிறகு, பீகாரில் உள்ள சீதாதேவி பிறப்பிடம், மற்றும் நேபாளத்தில் உள்ள ஜனாக்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும். தொடர்ந்து வாரணாசி, பிரயாக்ராஜ், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களிலுள்ள கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். தொடர்ந்து தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் என்னும் ஊருக்கு செல்வதுடன் சுற்றுலா நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து நேரடியாக டெல்லி சென்று பயணிகள் இறக்கி விடப்படுவார்கள்.
இது வெறும் ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல, "தேகோ அப்னா தேஷ்" (நமது நாட்டைப் பாருங்கள்) மற்றும் "ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்" (ஒரே பாரதம், உன்னத பாரதம்) திட்டங்களின் ஒருபகுதியாகவும் உள்ளது. இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள், மொழி, உணவு மற்றும் நிலப்பரப்புகளை அனுபவிக்க இது அரிய வாய்ப்பு. நீங்கள் ஒரு பக்தராகவோ அல்லது இந்தியாவின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் ஆராய விரும்பும் ஒருவராகவோ இருந்தால், இந்த ஸ்ரீ ராமாயண யாத்திரை உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.