செயற்கைக் கருத்தரிப்பும் சந்தேகங்களும்

சந்தோஷங்களை பிஞ்சுப் பாதங்கள் எட்டி உதைக்கின்றன

சரவணன் சந்திரன்
குழந்தையின்மை பிரச்சினைக்கு வழக்கமான தீர்வுகள் எதுவும் கைகொடுக்காதபோது செயற்கைக் கருத்தரிப்பு முறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இதுவும் 80களில் இருந்து மருத்துவ ஆய்வில் இருந்த விஷயம்தான். ஆனால் அது விலக்கப்பட்ட கனியாக அப்போது இருந்தது. மக்கள் அதை ஒரு தீண்டத்தகாத விஷயமாகவே ஆரம்பத்தில் பார்த்தார்கள்.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து தீவிரமான விளம்பரங்களை முன்னெடுக்கும் அரசு குழந்தையின்மையையும் ஒரு பிரச்சினையாக முன்னிறுத்தி பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என என இந்தத் துறையில் உள்ள மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நாள்பட்ட நோய் என்பது போல நாள் கடந்து நடக்கும் திருமணங்களையும் மாறிவரும் வாழ்க்கை முறைகளையும் குழந்தையின்மை பிரச்சினைக்குக் காரணங்களாக முன்னிறுத்துகிறார்கள். தத்தெடுப்பதில் ஆயிரம் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. தவிர தத்தெடுப்பது என்பதை கௌரவக் குறைச்சலாகப் பார்க்கும் மனோபாவம் அழுத்தமாக ஊன்றப்பட்டிருக்கிறது. தத்தெடுத்த குழந்தைகளோடு வாழ்பவர்கள் கடுமையாக அவமானப்படுத்தப்படுகின்றனர்.
செயற்கை கருத்தரிப்பு முறை என்று வரும்போது அதைக் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் போக்கே இருக்கிறது. 21 வயதில்தான் பெண்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மருத்துவத் துறை அறிவுறுத்துகிறது. ஆண்கள் பெண்கள் எனப் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருபாலருக்கும் இந்த விவகாரத்தில் பிரச்சினை இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் நிலத்தில் கால்பரப்பி நிற்பதற்குள் 30 வயதைத் தொட்டுவிடுகிறோம். அதற்கடுத்துதான் கல்யாணம் காதல் என்பதெல்லாம். இந்தப் பின்னணியில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குப் பிரச்சினையில்லை. குழந்தையின்மை பிரச்சினை இருப்பவர்கள் என்னதான் செய்வார்கள்? அதைத்தான் பூங்குழலி ரவிச்சந்திரன் தம்பதியினரும் செய்தார்கள்.
பூங்குழலிக்கு அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடுமையான குடும்பப் பொறுப்பு. அதற்காக திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். இப்படித்தான் பெரும்பாலான நகர்ப்புறம் சார்ந்த வாழ்க்கை இருக்கிறது. செயற்கை கருத்தரிப்பு முறையின் வழியாக அவர் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொண்ட போது பூங்குழலிக்கு வயது 45. இப்போது வராது வந்த வசந்தம் என அவருக்குக் கிடைத்த இந்த குட்டி வாழ்க்கைகள் இரண்டையும் கொண்டாடுகிறார். செயற்கை முறை இது என்று சொல்பவர்கள் பூமி படாத பிஞ்சின் பாதங்களைப் பார்த்த பிறகு என்ன சொல்வார்கள்?
அவரது சந்தோஷங்களை பிஞ்சுப் பாதங்கள் எட்டி உதைக்கின்றன. இதற்கு முன்னரும் இந்த சமூகம் எட்டி உதைத்தது. இப்போது இந்த உதைகள், சமூகம் தந்த அந்த உதைகளை எட்டி உதைக்கின்றன என்கிறார் அவர்.
பூங்குழலி, பேபி, மேரி போன்றவர்களெல்லாம் சின்ன உதாரணம்தான். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் இதுமாதிரி செயற்கை முறையில் கருத்தரித்தவர்களுக்கான தனிப்பட்ட சந்திப்பு ஒன்று நடந்தது. கடந்த இருபதாண்டுகளில் இந்த முறையில் பிறந்த சில ஆயிரம் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களுடன் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள். அந்தச் சந்திப்பு உலகிற்கு நாங்கள் சந்தோஷமாகவும் நலமாகவும் இருக்கிறோம் என்கிற செய்தியை உரக்கச் சொன்னது.
செயற்கை கருத்தரிப்பு குறித்த அத்தனை சந்தேகங்களையும் அந்தச் சந்திப்பில் தவிடு பொடியாக்கினார்கள் அந்தக் குழந்தைகள். இது எனது கணவரின் விந்தணுவா என இன்னமும் குழந்தை மாதிரி கேள்வி எழுப்புபவர்களைப் பார்த்து அந்தக் குழந்தைகளே சிரிப்பார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

×Close
×Close