பீர் பிரியரா நீங்கள்? உங்களுக்காக சில தகவல்கள்

பீர் மதுவே அல்ல என்று சொல்வது சுத்த பொய்

மச்சான்… பீர் மட்டும் குடி… நீ வேற எதுவும் குடிக்க வேண்டாம்… அது உடம்புக்கு நல்லதுடா…

பீர் குடிக்கிறதுனால நீ குடிகாரன் கிடையாதுடா… எதையும் அளவோடு சாப்பிட்டா நல்லது தாண்டா மச்சான்… போன்ற நண்பர்களின் அறிவுரைகளை கேட்காத நபர்களே இருக்க முடியாது. உண்மையில் பீர் (அ) பியர் குடிப்பது உடம்புக்கு நல்லதா?

ஒரு மண்ணும் கிடையாது!.

பீரில் அதிகமாக ஆக்ஸிலேட் மற்றும் யூரிக் ஆஸிட் அமிலங்கள் உள்ளன. சிறுநீரக பாதிப்புகள் உள்ள ஒருவர் பீர் குடிக்கும்போது இவை அதிகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், மிகப்பெரிய பாதிப்புகள் உண்டாகும். ‘வயிறு தொடர்பான தொந்தரவு உள்ளவர்கள் பீர் குடித்தால் சரியாகிவிடும்’ என்று தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. குடல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக பீர் அருந்தவே கூடாது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய்கள் உள்ளவர்கள், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் சூடான சூழலில் வேலை செய்யும் டிரைவர்கள், மெஷினில் வேலை பார்ப்பவர்கள், அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்கள் அனைவருமே பீரைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பீரை தொடர்ச்சியாக குடித்து வருபவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஏற்கனவே கல் இருப்பவர்களுக்கு, அதிகமாகவும் வாய்ப்புண்டு. ‘பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்’ என்று இனி யாராவது உங்களிடம் சொன்னால் நம்ப வேண்டாம்.

பீர், பல பிரச்னைகளுக்கு தீர்வு என்றும், பல நோய்களைத் தீர்க்கும் என்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ‘பீர் மதுவே அல்ல’ என்ற பிம்பமும் ஏற்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு பின்னால் ஒரு கார்ப்பரேட் மூளையே இருக்கிறது. உண்மையில், பீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு தீமைகளே உண்டாகின்றன. தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. மது ஒருபோதும் எந்த நோய்க்கும் மருந்தாகாது. அது சமுதாயத்தில் மனிதனுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close