/indian-express-tamil/media/media_files/2025/05/11/dg660SQuOVYY2onwMkvu.jpg)
ஒவ்வொரு கூந்தல் வகைகளுக்கு வெவ்வேறு விதமான பராமரிப்பு தேவைப்படுகிறது. உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியும். ஆனால் எந்த எண்ணெய் இதற்குப் பொருந்தும்? பொதுவாக ரோஸ்மேரி அல்லது தேங்காய் எண்ணெய்களுக்கு அதிக கவனம் இருக்கும் நிலையில், புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் அதிக நன்மைகளைத் தரக்கூடிய சில மறைக்கப்பட்ட விஷயங்களை நாம் கண்டறியலாம். உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் திராட்சை விதை எண்ணெய் எவ்வாறு முக்கியமானதாக இருக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
திராட்சை விதை எண்ணெயை ஏன் பயன்படுத்த வேண்டும்?
தோல் மருத்துவர் கல்யாணி தேஷ்முக் கருத்துப்படி, திராட்சை விதை எண்ணெய் கூந்தலுக்கு பளபளப்பையும், மென்மையையும் சேர்க்க உதவும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும். திராட்சை விதை எண்ணெயின் இலகுவான அமைப்பு மற்றும் வலுவான ஊட்டச்சத்துக்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. இது "மிகவும் ஈரப்பதமூட்டும் தன்மை கொண்டது, இதனால் வறண்ட, சுருள் முடிக்கு ஏற்றது. கூந்தலின் வேர்க்கால்கள் வரை ஊடுருவும் திறன் இருப்பதால் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. வறட்சியை குறைத்து ஒட்டுமொத்த கூந்தல் அமைப்பை மேம்படுத்துகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
திராட்சை விதை எண்ணெயில் முக்கியமான கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக "லினோலிக் அமிலம்" உள்ளது. இது கூந்தல் இழைகளை வலுப்படுத்தி, அவை உடைவதை குறைக்கலாம். இந்த வலுவூட்டல் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. திராட்சை விதை எண்ணெய் வறண்ட, அரிப்புள்ள உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதன் மூலம் நிவாரணம் அளித்து பொடுகைக் குறைக்க உதவும். உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
அதன் ஊட்டச்சத்துகள் என்ன?
குறிப்பாக, திராட்சை விதை எண்ணெயில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணரும், நீரிழிவு நோய் கல்வியாளருமான கனிக்கா மல்ஹோத்ரா கூறுகிறார். "இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது கூந்தலை சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்
மேலும், இதில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக லினோலிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், முடி வளர்ச்சிக்கும் அவசியம் ஆகும்.
ஆனால் ஒரு குறைபாடு என்னவென்றால், திராட்சை விதை எண்ணெய் மிகவும் வறண்ட அல்லது கரடுமுரடான கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை வழங்காது. ஏனெனில், அதன் இலகுவான தன்மை தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற கனமான எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது போதுமான நீரேற்றத்தை அளிக்காது.
"மேலும், எண்ணெய் பசை உள்ள உச்சந்தலையைக் கொண்டவர்கள், திராட்சை விதை எண்ணெயை அதிகமாகவோ அல்லது வேர்களுக்கு அருகிலோ பயன்படுத்தினால் அது எண்ணெய் பசையை அதிகப்படுத்தலாம். இதனால் சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம்" என்று மல்ஹோத்ரா மேலும் கூறுகிறார்.
திராட்சை விதை எண்ணெய்யை இலகுவான மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம். நேரடியாக சருமத்தில் தடவலாம் அல்லது நீரேற்றத்தை அதிகரிக்க மற்ற தோல் பராமரிப்பு பொருட்களுடன் கலக்கலாம். இது ஒரு சிறந்த மேக்கப் ரிமூவராகவும் செயல்படுகிறது. மல்ஹோத்ரா கூறுகையில், "இறுதியாக, திராட்சை விதை எண்ணெயின் தரம் மாறுபடலாம்; ஹெக்ஸேன் போன்ற அபாயகரமான இரசாயனங்களைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய்களில் கூந்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எச்சங்கள் இருக்கலாம், எனவே உயர்தர, குளிர்ச்சியான முறையில் பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவது முக்கியம்" என தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.