/indian-express-tamil/media/media_files/2025/08/24/pee-once-you-wake-up-2025-08-24-17-47-50.jpg)
அதிகாலையில் ஏன் அவசரமாக சிறுநீர் வருகிறது? நிபுணர்கள் தரும் விளக்கம்!
காலையில் எழுந்ததும் அவசரமாக கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதா? இது உங்களுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. இது மிகவும் சாதாரணமானது என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். உடலியல் ஊட்டச்சத்து நிபுணரான தீபிகா ஷர்மா, காலையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பான ஒன்று என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் டாட் காம் இணையதளத்திற்குத் தெரிவித்தார்.
"தூங்குவதற்கு முன் நீங்கள் ஒருகிளாஸ் தண்ணீர் குடித்தால், உடல் உடனடியாக வேலை செய்யத் தொடங்குகிறது. அரை மணி நேரத்தில், உங்கள் சிறுநீரகங்கள் அதை வடிகட்ட ஆரம்பித்து, 5-6 மணி நேரத்திற்குப் பிறகு, சிறுநீர்ப்பை பொதுவாக நிறைந்துவிடுகிறது. அதனால்தான் நீங்கள் எழுந்தவுடன் கழிவறைக்குச் செல்ல வேண்டிய உணர்வு ஏற்படுகிறது," என்று அவர் விளக்கினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சிறுநீர் கழிப்பதற்காக இரவில் ஒருமுறை எழுவது முற்றிலும் இயல்பானது என்றும் அவர் கூறினார். தீபிகா ஷர்மாவின் கூற்றுப்படி, தண்ணீர் குடிக்கும் முறைதான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. "காலையில் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக அல்லது தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, நாள் முழுவதும் சிறியளவில் தண்ணீர் குடிக்கலாம். இது உங்கள் தூக்கத்திற்கு இடையூறு இல்லாமல் உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்" என்று ஷர்மா கூறினார்.
மேலும், தூங்குவதற்கு முன் தண்ணீர் குடித்த பிறகு இரவில் ஒருமுறை சிறுநீர் கழிக்க எழுவது இயல்பானதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், நீங்கள் அடிக்கடி எழுந்தால், தூக்கம் அடிக்கடி தடைபட்டால், அல்லது உங்களுக்கு எப்போதும் தாகமாக இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
சிறுநீர் கழிக்கமால் புறக்கணித்தால் என்ன நடக்கும்?
உங்கள் சிறுநீர்ப்பையை ஒரு பலூனாக கற்பனை செய்து பாருங்கள். அது சிறுநீரால் நிரம்பும்போது, அதை வெளியேற்ற வேண்டும் என்று மூளைக்கு சிக்னல்களை அனுப்புகிறது. வோக்கார்ட் மருத்துவமனையின் சிறுநீரக நிபுணரான டாக்டர் அஷுதோஷ் பாகேல், "நீங்கள் அதை அடக்கினால், சிறுநீர்ப்பை தொடர்ந்து விரிவடைந்து, அதன் சுவர்களில் அழுத்தம் கொடுக்கும். இது பலூனை அதன் பரிந்துரைக்கப்பட்ட அளவைத் தாண்டி ஊதுவது போன்றது. இறுதியில் அது வெடிக்கக்கூடும். ஆனால், சிறுநீர்ப்பை வெடிக்காது, ஆனால் அது சிக்கல்களை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
மதர்ஸ் லேப் ஐவிஎஃப் மையத்தின் மருத்துவ இயக்குநரான டாக்டர் ஷோபா குப்தா, சிறுநீர்ப்பையில் நீண்ட நேரம் சிறுநீர் தேங்குவதால் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும் என்றும், அது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு (UTIs) வழிவகுக்கும் என்றும் கூறினார்.
"சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அசௌகரியம், வலி மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். கூடுதலாக, சிறுநீர் கழிக்கும் உணர்வை அடக்குவது காலப்போக்கில் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை பாதிக்கும்" என்று டாக்டர் குப்தா கூறினார். ஜின்டால் நேச்சுர்கியூர் இன்ஸ்டிடியூட்டின் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் பாபினா என்.எம்., "சிறுநீர் கழிக்கும் உணர்வை அடக்குவது, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் இயற்கையான செயல்முறையை சீர்குலைத்து, உடல் செயல்பாடுகளில் சமநிலையின்மையை ஏற்படுத்தக்கூடும்" என்று தெரிவித்தார்.
சிறுநீர்ப்பை ஒரு தசை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை காலிசெய்ய வேண்டும் என்ற சமிக்ஞைகளை தொடர்ந்து புறக்கணித்தால் தசைகள் பலவீனமடையலாம் மற்றும் சிறுநீர்ப்பையின் கொள்ளளவு குறையலாம். "சிறுநீர் கசிவு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், மேலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை நீண்ட நேரம் அடக்குவது சிறுநீர்ப்பையில் வீக்கத்தை ஏற்படுத்தி, அசௌகரியத்தையும், சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும். தீவிரமான சந்தர்ப்பங்களில், சிறுநீர்ப்பையால் தன்னை முழுமையாக காலி செய்ய முடியாத நிலையும் ஏற்படலாம்" என்று டாக்டர் குப்தா மேலும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.