சர்க்கரை நோய்க்கு தீர்வாகுமா ஸ்டெம் செல் சிகிச்சை? புதிய ஆராய்ச்சி கூறுவது என்ன? டாக்டர் அருண்குமார் விளக்கம்

ஸ்டெம் செல் சிகிச்சை மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சை உண்மையிலேயே நீரிழிவு நோய்க்கு முழுமையான தீர்வு அளிக்குமா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமான வரப்பிரசாதமா? என்பது குறித்து டாக்டர் அருண்குமார் விரிவாக விளக்குகிறார்.

ஸ்டெம் செல் சிகிச்சை மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சை உண்மையிலேயே நீரிழிவு நோய்க்கு முழுமையான தீர்வு அளிக்குமா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமான வரப்பிரசாதமா? என்பது குறித்து டாக்டர் அருண்குமார் விரிவாக விளக்குகிறார்.

author-image
WebDesk
New Update
stem cell therapy

சர்க்கரை நோய்க்கு தீர்வாகுமா ஸ்டெம் செல் சிகிச்சை? புதிய ஆராய்ச்சி கூறுவது என்ன? டாக்டர் அருண்குமார் விளக்கம்

சமீபகாலமாக, நீரிழிவு நோய்க்கான ஸ்டெம் செல் சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் மருத்துவ உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 59 வயது டைப் 2 நீரிழிவு நோயாளி ஒருவர், இந்த சிகிச்சைக்குப் பிறகு 33 மாதங்களாக இன்சுலின் ஊசி இல்லாமல் வாழ்வது பெரிய மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த சிகிச்சை உண்மையிலேயே நீரிழிவு நோய்க்கு முழுமையான தீர்வு அளிக்குமா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமான வரப்பிரசாதமா? என்பது குறித்து டாக்டர் அருண்குமார் விரிவாக விளக்குகிறார்.

Advertisment

ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?

இந்த சிகிச்சை முறையில், டைப் 2 நீரிழிவு நோயாளியின் ரத்த செல்களிலிருந்து ப்ளூரிபொட்டன்ட் ஸ்டெம் செல்கள் எடுக்கப்படுகின்றன. இவை இன்சுலின் சுரக்கும் ஐலட்செல்களாக மாற்றப்பட்டு, மீண்டும் நோயாளியின் உடலில் செலுத்தப்படுகின்றன. இதன்மூலம், கணையம் தானாகவே இன்சுலினை சுரக்க தொடங்குகிறது. இது இன்சுலின் குறைபாடுள்ள நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைப்-2 நீரிழிவு நோய்க்கான உண்மையான காரணம் என்ன?

Advertisment
Advertisements

டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் குறைபாடு அடிப்படை காரணம் அல்ல. மாறாக, அவர்களின் உடலில் செல்களுக்கு இன்சுலினை ஏற்றுக்கொள்ளும் சக்தி குறைவாக இருக்கும், இதை இன்சுலின் எதிர்ப்புத் தன்மை (Insulin Resistance) என்று அழைக்கிறோம். ஆரம்ப கட்டத்தில், கணையம் அதிக இன்சுலினை உற்பத்தி செய்தாலும், உடல் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாது. இந்த ஸ்டெம் செல் சிகிச்சை, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகமாக உள்ள ஆரம்ப நிலை டைப் 2 நோயாளிகளுக்குப் பயன் தராது. ஏனெனில், அவர்களின் கணையம் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாறாக, இன்சுலின் தேவைப்படும் மேம்பட்ட நிலை டைப் 2 நோயாளிகளுக்கு மட்டுமே இது பயனுள்ளதாக அமையும் என்று டாக்டர் அருண்குமார் தெளிவுபடுத்துகிறார்.

டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை பொருந்துமா?

டைப் 1 நீரிழிவு நோயில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, இன்சுலின் சுரக்கும் செல்களைத் தாக்கி அழித்துவிடுகிறது. இதனால், ஸ்டெம் செல் மூலம் புதிதாகச் செலுத்தப்படும் செல்களையும் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் அழிக்க வாய்ப்புள்ளது. இதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் மருந்துகள் தேவைப்படும், இது நோயாளிகளுக்குக் கூடுதல் ஆபத்தை விளைவிக்கும். டைப் 1 நோயாளிகள் இன்சுலின் ஊசி மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதால், இவ்வளவு சிக்கலான சிகிச்சை முறை அவர்களுக்குத் தேவையில்லை என்று டாக்டர் அருண்குமார் தெரிவிக்கிறார்.

டைப் 2 நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு என்ன?

ஸ்டெம் செல் சிகிச்சை குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றம் என்றாலும், பெரும்பாலான டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு வாழ்க்கை முறை மாற்றங்களே சிறந்த மற்றும் நிரந்தர தீர்வாக அமையும் என்று டாக்டர் அருண்குமார் வலியுறுத்துகிறார். உடல் எடை குறைவது இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் குறைத்து, உடலின் இன்சுலின் பயன்பாட்டை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கார்டியாக் பயிற்சி மற்றும் தசை கூட்டும் பயிற்சிகள் போன்றவை நீரிழிவு மேலாண்மைக்கு அத்தியாவசியமானவை. மாவுச்சத்து உட்கொள்ளலைக் குறைத்து, புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பெரும்பாலான டைப் 2 நோயாளிகள் மருந்து இல்லாமல் கூட சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: