/indian-express-tamil/media/media_files/2025/05/15/hZ5VHB982OzYDbWq4GyR.jpg)
உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல உடல்நல பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க நடைப்பயிற்சி மற்றும் ஓட்டம் ஆகிய இரண்டுமே உதவுகின்றன. அப்படியிருக்க, இரண்டில் எது சிறந்தது? அதிக தூரம் நடப்பது நல்லதா அல்லது குறைந்த தூரம் ஓடுவது போதுமா? இது குறித்து ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுதிர் குமார் விளக்கம் அளிக்கிறார்.
மருத்துவர் சுதிர் குமார் கூறுகையில், "நடைபயிற்சி சிறந்ததா அல்லது ஓட்டம் சிறந்ததா என்று திட்டவட்டமாக கூறுவது கடினம். ஓட்டம் நேரத்தை மிச்சப்படுத்தும். உதாரணமாக, 1 கி.மீ. ஓடுவதற்கு 6 - 8 நிமிடங்கள் ஆகும். அதே நேரத்தில் 2 கி.மீ. நடப்பதற்கு 20 - 25 நிமிடங்கள் ஆகலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், ஒரே நேரத்தில் அல்லது சமமான தூரத்தில் ஒப்பிடும்போது, நடப்பதை விட ஓடுவது அதிக கலோரிகளை எரிக்கும். "ஓட்டம், நடப்பதை விட இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. VO2 max எனப்படும் அதிகபட்ச ஆக்சிஜன் உட்கொள்ளும் திறன் ஓடுவதால் அதிகம் மேம்படும்" என்று மருத்துவர் குமார் கூறினார்.
இருப்பினும், ஓடுவதில் சில குறைபாடுகளும் உள்ளன. "ஓடுவது மூட்டுகள் மற்றும் தசைநார்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நடப்பதை விட காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகம்" என்று மருத்துவர் குமார் எச்சரித்தார்.
முழங்கால் மூட்டுவலி, உடல் பருமன் அல்லது தீவிர இதய நோய் போன்ற சில இணை நோய்கள் உள்ளவர்கள் ஓட முடியாமல் போகலாம். ஆனால், அவர்களால் எளிதாக நடக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். "வயதானவர்களுக்கு ஓடுவதை விட நடப்பது எளிதாக இருக்கலாம்" என்றும் மருத்துவர் குமார் கூறினார்.
எனவே, ஓடுவதற்கும், நடப்பதற்கும் அவற்றின் சொந்த நன்மைகள் உள்ளன. "தனிநபரின் விருப்பத்திற்கு ஏற்றதை அவர்கள் தேர்வு செய்யலாம். இன்றைய உலகில், பெரும்பாலான மக்கள் பரிந்துரைக்கப்பட்ட வாராந்திர உடற்பயிற்சி இலக்குகளை (வாரத்திற்கு 300 நிமிடங்கள் லேசான உடற்பயிற்சி, அதாவது நடைபயிற்சி அல்லது 150 நிமிடங்கள் மிதமான - தீவிர உடற்பயிற்சி, அதாவது ஓட்டம்) பூர்த்தி செய்ய முடிவதில்லை. எனவே, உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ற ஒரு உடல் செயல்பாட்டை (நடைபயிற்சி அல்லது ஓட்டம்) தேர்ந்தெடுத்து, வாராந்திர இலக்கை அடைய முயற்சிப்பது முக்கியம்" என்று மருத்துவர் குமார் அறிவுறுத்தினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us