தனி மனித வாழ்வை செம்மைப்படுத்தும் ரமலான் நோன்பு என்று இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரமலான் நோன்பு திருநாளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ரமலான் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும் உரித்தாகும். இஸ்லாமிய மார்க்கக் கடமையில் ஒன்றான நோன்பு, தனிமனித வாழ்வைச் செம்மைப்படுத்துவதோடு, நோன்பு மாதத்தில் ஏழைகளுக்குப் பங்கிட்டு அளிக்கும் கொடைகள் மூலம் சமுதாயத்தில் ஏழ்மை நீங்கி, அனைவரும் வளமோடு வாழ்வதற்கான வழியையும் திறந்துவிடுகிறது என்பதைப் பார்க்கிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் திராவிட மாடல் நல்லாட்சியில் அனைத்து சமுதாய மக்களும் நோன்பை மதித்துப் போற்றி வருவதைப் பார்க்கும்போது, எல்லாரையும் மனதால் இணைக்கும் இந்தத் திராவிட மாடல் நல்லாட்சி எங்கணும் பரவ வேண்டும் என்று பிரார்த்திக்கக் கடமைப்பட்டவர்களாகி விடுகிறோம்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவனும்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (உறவினர்) ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உன்னதக் கொள்கைகளை நிலைநிறுத்தும் ரமலான் நோன்புத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லாமும் எல்லாரும் பெற்று இனிதாக வாழ்ந்திட வாழ்த்துவோம். இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்