சமீபத்தில் சென்னை வந்த ஜான்வி கபூர், நடிகையும் ஸ்ரீதேவியின் உறவினர் மகேஸ்வரி அய்யப்பனுடன் முப்பாத்தம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை ஜான்வி, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
முதன்முறையாக முப்பாத்தம்மன் கோவிலுக்குச் சென்றேன். சென்னையில் அம்மாவுக்கு மிகவும் பிடித்த இடம்!
முப்பாத்தம்மன் கோயில்
சென்னை, தியாகராயநகரில் பனகல் பார்க்கிற்கு பின்புறம் உள்ள தெருவில் அமைந்திருக்கிறது ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில்.
கணபதி, நவகிரகங்கள், முருகப்பெருமான், ஐய்யப்பன், ஆஞ்சநேயர் எனப் பல சந்நிதிகளைக் கொண்டு அழகுற அமைந்துள்ள இந்த ஆலயம், சுமார் 300 ஆண்டுகள் பழைமையானது
இந்த ஆலயத்தின் சிறப்பே இங்கு அமைந்துள்ள பிரமாண்ட புற்றுதான். சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, அம்மனை வேண்டிக் கொண்டால், காலசர்ப்ப தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
சனிக்கிழமைகளில், ஆஞ்சநேயரை தரிசிப்பதற்கு என்றே இங்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருக்கிறது.
இங்கு வரும் பக்தர்கள், எலுமிச்சையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வழிபடுகிறார்கள்.
இதில் ஏதோவொரு கிழமையைத் தேர்வு செய்து அந்தக் கிழமைகளில், ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முப்பாத்தம்மனை வழிபட்டு வந்தால், திருமண வரம் கிடைக்கும் என்றும், வீடு மனை வாங்கும் யோகத்தை அம்மன் அருளுவாள் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
எல்லா வெள்ளிக்கிழமையும் இங்கு சிறப்பான வழிபாடு நடந்தாலும், ஆடி மாத வருடாந்திர உற்சவ விழா இங்கு வெகு சிறப்பானது.
முப்பாத்தம்மனை ஒருமுறை நேரில் வந்து வழிபட்டுப் பாருங்கள். உங்கள் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் அதிசயத்தைக் காண்பீர்கள் என்று பூரிக்கின்றனர், பக்தர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“