Janmashtami 2020: மகா விஷ்ணு பூமியின் பாரத்தை குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த நாள், கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பல பலகாரங்களை வீட்டில் செய்து, வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் பக்தர்கள். அந்த வகையில் கிருஷ்ணருக்கு பிடித்த சீடை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி - 300 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன்
ஓமம் - அரை டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் - சிறு துண்டு
வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
அரைத்த சிவப்பு மிளகாய் விழுது அல்லது பொடித்த மிளகு- ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, நிழலில் காய விடுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதை அரைத்து, மாவைச் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல், பெருங்காயத்தைப் பொடித்து 50 மில்லி நீர்விட்டுக் கரைத்துவைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, பச்சரிசி மாவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மிளகுத்தூள் (அ) மிளகாய் விழுது, உப்பு, ஓமம், எள், வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, உளுத்தம் மாவு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றையும், பெருங்காயக் கரைசலையும் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிறகு, அந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் ஓமம் - உப்பு சீடை தயார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”