ஜப்பானியர்களின் "யுடோரி" என்ற தத்துவம் வேகமான நவீன வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு ஒரு சிறந்த மருந்து போன்றது. ஜப்பானிய கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள யுடோரி, ஓய்வு, சிந்தனை மற்றும் வாழ்க்கைக்கு மிகவும் சமநிலையான அணுகுமுறையை உருவாக்குவதற்கான மன மற்றும் உடல் ரீதியான இடத்தைக் குறிக்கிறது. "இது மெதுவாகச் செல்லவும், நிலையான அவசரத்தை குறைக்கவும், உற்பத்தித் திறன் மற்றும் அமைதி இரண்டிற்கும் இடமளிக்கவும் ஊக்குவிக்கிறது" என்று மனநல மருத்துவர் மற்றும் கேட்வே ஆஃப் ஹீலிங் நிறுவனத்தின் நிறுவனர் சாந்தினி துங்நாயத் கூறினார்.
"கல்வி மற்றும் பணிச்சூழல்களில் இருந்து தோன்றிய இந்த கருத்து, வாழ்க்கையின் பரந்த அம்சங்களை உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளது. தனிநபர்கள் தங்கள் அட்டவணையில் வேலைக்கு மட்டுமல்லாமல், சுய-கவனிப்பு, படைப்பாற்றல் மற்றும் ஓய்வு நேரங்களுக்காகவும் இடமளிக்க வேண்டும் என்று இது அறிவுறுத்துகிறது. செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் பரபரப்பான கலாசாரத்திற்கு இது ஒரு பதிலாகும்," என்று மருத்துவர் துங்நாயத் கூறினார்.
யுடோரி, சமநிலையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. யுடோரி என்பது வெறுமனே மெதுவாகச் செல்வது மட்டுமல்ல; வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை இணக்கமாக இணைந்து வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவது பற்றியது என்று மருத்துவர் துங்நாயத் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பமும், தொடர்புகளும் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ள நிலையில், ஓய்வெடுக்கவும், சிந்திக்கவும், புத்துணர்ச்சி பெறவும் ஒரு இடைவெளிக்கான தேவை அதிகமாக உள்ளது. நிலையான மாற்றம் மற்றும் அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த தற்போதைய உலகளாவிய சூழ்நிலை யுடோரி என்ற கருத்தை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது. குறிப்பாக உணர்ச்சி மற்றும் மன சமநிலையை நாடுவோருக்கு இது சரியானதாக இருக்கும் என்று மருத்துவர் துங்நாயத் கூறினார்.
யுடோரியை அன்றாட வாழ்வில் பின்பற்றுவதற்கான சில வழிமுறைகள்:
ஓய்வுக்கான நேரத்தை திட்டமிடுதல்: எதையும் செய்யாமல் இருக்கும் தருணங்களை திட்டமிடுங்கள். எந்தவொரு பணி சார்ந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உங்கள் மனதையும், உடலையும் மீட்டமைக்க அனுமதிக்கவும்.
நேரத்தை ஒரு ஓட்டமாக மறுவடிவமைத்தல்: உங்கள் நாளை ஒரு இயற்கையான ஓட்டமாகப் பாருங்கள். பணிகளை முடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, முயற்சி மற்றும் எளிமை ஆகியவற்றை சமநிலைப்படுத்துங்கள்.
அழுத்தம் இல்லாத பகுதிகளை உருவாக்குதல்: உங்கள் வீடு அல்லது வாழ்க்கையில் உற்பத்தி திறனுக்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பகுதிகளை ஒதுக்குங்கள். அவை முற்றிலும் ஓய்வு அல்லது படைப்பாற்றலுக்கான பகுதிகளாக இருக்க வேண்டும்.
சமூக தொடர்புகளைத் தேர்ந்தெடுத்தல்: உங்களை உணர்ச்சி ரீதியாக நிரப்பும் அர்த்தமுள்ள உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். கடமைகளால் உங்கள் அட்டவணையை நிரப்புவதை விட, தரமான தொடர்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
யுடோரி என்ற கருத்தை பின்பற்றுவதன் மூலம், அளவுக்கு அதிகமான உற்பத்தி திறனை விட தரத்திற்கும், குழப்பத்தை விட அமைதிக்கும், இயந்திரத்தனமான வாழ்க்கையை விட விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கைக்கும் மதிப்பளிக்கும் ஒரு வாழ்க்கை முறையை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.