திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் ஜப்பானிய பக்தர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து, பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற முருகன் கோயில்களுள் ஒன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக இந்த கோயில் விளங்குகிறது.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், கார்த்திகை, மார்கழி, மற்றும் தை மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து பாத யாத்திரை மேற்கொள்வர். அந்த வகையில், ஆடி மாதம் தொடங்கியது முதல் கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) சனிக்கிழமை காலை ஜப்பானில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள், பழனி மலை அடிவாரத்தில் வடக்கு கிரி வீதியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். பின்னர், பால்குடம் எடுத்து கிரிவலமாக (ஜப்பானிய வேல் தீர்த்த யாத்திரை) திருஆவினன்குடி முருகன் கோயிலுக்கு சென்றனர். அங்கு, முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
முன்னதாக, இந்த வேல் தீர்த்த யாத்திரையை, புலிப்பாணி யாத்திர சுவாமிகள் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் தொடங்கி வைத்தார். ஜப்பானிய சிவஆதீனம் ஸ்ரீலஸ்ரீ பால்கும்ப குருமுனி சுவாமிகள் தலைமையில், பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். இதில், அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பால்குடம் எடுத்து வந்தனர். ஜப்பானிய முருக பக்தர்களின் இந்த பால்குட ஊர்வலம் அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து, இந்த ஜப்பானிய பக்தர்கள் உலக அமைதிக்காக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். பழனியில் நடைபெற்ற ‘முருகர் பக்தர் மாநாட்டிலும்’ இந்த ஜப்பானிய குழவைச் சேர்ந்த சிலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்