/indian-express-tamil/media/media_files/2025/01/01/EYTIG1ONaoLDmnDL3qRc.jpg)
புளித்த மோருடன் இதை சேர்த்து தெளிங்க… பூக்காத மல்லிகை செடியும் பூக்கும்!
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைச் செடி பசுமையாக வளர்ந்திருந்தும், பூக்க மட்டும் மறுக்கிறதா? இது பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்னைதான். ரசாயன உரங்கள் தற்காலிக தீர்வுகளைத் தந்தாலும், நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய, செலவில்லாத இயற்கை முறை மூலம் நிரந்தரமான, அற்புதமான பலன்களைப் பெற முடியும்.
கரைசல் தயாரிப்பது எப்படி?
செடிகளில் பூக்கும் தன்மையைத் தூண்டி, மொட்டுக்கள் அதிகமாக உருவாக இது உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
புளித்த மோர்: 1 லிட்டர் (குறைந்தது 3 நாட்களுக்கு புளிக்க வைத்தது சிறந்தது)
அரப்பு இலை பொடி: 1 தேக்கரண்டி (அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்)
செய்முறை: ஒரு மண் பானை அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் 1 லிட்டர் புளித்த மோரை ஊற்றவும். அதில் 1 தேக்கரண்டி அரப்புப் பொடியைச் சேர்த்து, கட்டிகள் எதுவும் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். கலவையின் மீது ஒரு மெல்லிய பருத்தித் துணியைக் கட்டி, நிழலான இடத்தில் வைத்து விடுங்கள். இந்தக் கலவையை 3 முதல் 4 நாட்கள் வரை புளிக்க விட வேண்டும். தினமும் ஒருமுறை பாத்திரத்தை லேசாக அசைத்து விடுவது நொதித்தல் செயல்முறைக்கு உதவும். (சாதரண மோராக இருந்தால், 7 நாட்கள் வரை புளிக்க விடவும்).
தயாரான கரைசலை நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. சரியான விகிதத்தில் நீர்த்துப் பயன்படுத்துவதே சிறந்த பலனைத் தரும். சரியான அளவு 100 மில்லி கரைசலுக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் (1:10) கலக்கவும். மாலை வேளையில் தெளிப்பதே உகந்தது. அப்போது வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால், இலைகள் கரைசலை முழுமையாக உறிஞ்சிக்கொள்ளும். இந்தக் கலவையை செடியின் இலைகள், கிளைகள், தண்டு என அனைத்துப் பகுதிகளிலும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
அரப்பு மோர் கரைசலுடன் இந்த எளிய பராமரிப்பு முறைகளையும் பின்பற்றினால், பூக்களின் எண்ணிக்கையும் தரமும் பன்மடங்கு அதிகரிக்கும். செடியில் பூக்கள் குறைந்ததும், முதிர்ந்த மற்றும் தேவையில்லாத கிளைகளை வெட்டி விடுங்கள். கவாத்து செய்தபின் துளிர்க்கும் புதிய தளிர்களில் இந்தக் கரைசலைத் தெளிக்கும்போது, மொட்டுக்கள் அதிகமாக உருவாகும். வேர்ப்பகுதியில் மாதமொருமுறை மண்புழு உரம் அல்லது மீன் அமிலம் போன்ற இயற்கை உரங்களை இடுவது செடியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும். இந்தக் கரைசலைத் தயாரித்து ஒரு வாரத்திற்கு மேல் சேமித்து வைக்க வேண்டாம். தேவைப்படும் போது புதிதாகத் தயாரித்துப் பயன்படுத்துவதே இதன் முழுமையான பலனைத் தரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.