தமிழ்நாட்டில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் தான் ஜல்லிக்கட்டு பெருமளவுக்கு நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு காளையர்கள் களம் விளையாடுவர்.
இந்தநிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர்கள் தினத்தை கொண்டாட உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வரும் சூழலில் அந்த தினத்தில் பசுக்களையும் அரவணையுங்கள் என மத்திய அரசு புதிய உத்தரவை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தால் நாட்டில் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தை கொண்டாடுமாறு பொதுமக்களை விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தநிலையில் பசுக்கு மட்டும் தான் அரவணைப்பு தினம் கொண்டாடுவீங்களா என போட்டி போடும் வகையில் காளைகளுக்கும் அரவணைப்பு தினம் கொண்டாட வேண்டும் என திருச்சியில் இருந்து முதல் குரல் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இளைஞரணி தலைவர் டி.ராஜேஷ் நம்மிடம் தெரிவிக்கையில்; இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் பிப்ரவரி 14ஆம் தேதி பசு அரவணைப்பு தினமாக(Cow Hug Day) கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. அதே போல் ஜனவரி 16 -ம் தேதி காளைகள் அரவணைப்பு தினமாக (Bull Hug Day) கொண்டாட வேண்டி இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிக்க வேண்டும் என் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
பசுக்களுக்கு பிப்ரவரி 14 பசு அரவணைப்பு தினமாக கொண்டாட இருக்கும் நிலையில் எதிர்வரும் ஆண்டுகளில் தமிழ் மக்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காணும் காளைகளை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி காளைகள் அரவணைப்பு தினமாக கொண்டாட திருச்சியில் எழுந்த முதல் குரலுக்கு தமிழ்நாடு எங்கும் ஆதரவு பெருகி உள்ளது என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“