நாய் என்றால் நன்றியுள்ளது. புதியவர்களை கண்டால் குரைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...ஆனால், மான் குரைப்பதை பார்த்திருக்கிறீர்களா!!! இல்லையென்றால், உடனே கிளம்புங்க கபினிக்கு...
கபினி எங்கே இருக்கு.....எப்படி போவது... இன்னும் என்னென்ன சிறப்புகள்!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து 163 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கபினி பிரதேசம். நாகர்ஹோலே வனப்பகுதியின் ஒரு அங்கமாக விளங்கும் கபினி, காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியாக மக்களால் அறியப்படுகிறது.
55 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் கபினி பிரேதசம், அடர்ந்த காடுகள், மலைப்பிரேதசங்கள், ஓடைகள், ஏரிகள் கொண்ட பரந்த அமைப்பாக விரவியுள்ளது. நாகர்ஹோலே வனப்பகுதியையும், பந்திப்பூர் வனப்பகுதியையும் பிரிக்கும் பகுதியாக, கபினியின் அணைப்பகுதியில் உள்ள நீ்ர்த்தேக்கம் உள்ளது.
பல்வேறு வகையான மழைப்பொழிவுகளை கொண்டுள்ள இந்த கபினி பிரதேசத்தில், அந்த தன்மைக்கேற்றவாறு பலவகைத் தாவர இனங்கள் நிறைந்துள்ளன.
ஆசிய யானைகள் அதிகம் வசிக்கும் பகுதியாக இந்த கபினி உள்ளது. யானைகள் தவிர்த்து குரைக்கும் மான்கள், நான்கு கொம்பு மான்கள், சாம்பார் மான்கள், தீ காக்கா, காட்டுப்பன்றி, காட்டெருமை, கருங்குரங்கு, இந்தியக்குரங்கு என இங்கு அதிகளவில் விலங்குகள் உள்ளன.
தாவர உண்ணிகள் அதிகளவில் இருப்பதால், அவற்றை உண்டு வாழும் ஊண் உண்ணிகளான புலி, சிறுத்தை, காட்டு நாய்கள் உள்ளிட்டவைகளும் இங்கு அதிகளவில் உள்ளன.
300க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இப்பகுதியில் இருப்பதால், பறவைகள் நல ஆர்வலர்களுக்கு இப்பகுதி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கபினி சுற்றுலா தளத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், ஜங்கிள் சவாரி மற்றும் ஜம்போ சவாரி எனப்படும் யானை சவாரி ஆகும். இங்குள்ள நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்வதன் மூலம், துள்ளி குதித்து விளையாடி மகிழும் புள்ளி மான்கள், சாம்பார் மான்களை கண்டுகளிக்கலாம்.
இயற்கை நடைப்பயணம், காட்டுவழி நடைப்பயணம், படகுச்சவாரி, சைக்கிள் சவாரி, ராத்திரி கூடார கேளிக்கை நிகழ்ச்சிகள், உள்ளூர் கிராம சுற்றுலாக்கள் என்று ஏராளமான பொழுதுபோக்கு அனுபவங்கள் இங்கு பயணிகளுக்காகவே காத்திருக்கின்றன.
கிளம்பிட்டீங்களா கபினிக்கு....