/indian-express-tamil/media/media_files/2025/08/16/kala-master-2025-08-16-17-18-25.jpg)
Kala Master
கலா மாஸ்டர், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவின் பிரபல நடன இயக்குநராக இருந்து வருகிறார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மூலம் நடிகையாகவும் மாறி இருக்கிறார். நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர், கலா அக்கா கிரிஜாவின் கணவர். கலாவின் தங்கை பிருந்தாவும், புகழ்பெற்ற நடன இயக்குநராகத் திகழ்கிறார்.
ஒருமுறை கலா மாஸ்டர் பிரபல தமிழ் இதழுக்கு அளித்த பேட்டியில், தான் சினிமாத் துறைக்குள் நுழைந்தது எப்படி என்பது குறித்து சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
சினிமாவுக்குள்ள நான் வந்த கதை!
சினிமாவுக்குள்ள நான் எப்படி வந்தேன்னு நிறையப் பேரு கேட்டிருக்காங்க. அத நான் பேட்டியில சொல்றப்போவே நினைச்சேன், இத உங்ககிட்டயும் கண்டிப்பா சொல்லணும்னு.
முதல்ல ஹிந்தில 'ஹீரோ'னு ஒரு படம். அத தெலுங்குல ரீமேக் பண்ணாங்க. அதுல நாகார்ஜுனாதான் ஹீரோ. அவருக்கு அது முதல் படம். அந்தப் படத்துக்கு நடன இயக்குநர் ரகு மாஸ்டர். அவருக்கு அதே நேரத்துல, நம்ம கமல் சார் படமான 'புன்னகை மன்னன்' படமும் இருந்துச்சு. அதனால, நாகார்ஜுனா படத்த என்னைப் பார்த்துக்கச் சொல்லி, எனக்கு உதவியா பிருந்தாவையும் அனுப்பினாரு.
பிருந்தா மாஸ்டர்
அப்படியேதான் பிருந்தா இஷ்டமில்லாம சினிமாவுக்குள்ள வந்தா. ஆனா, நான் அப்படியில்லை. ஸ்கூலுக்கு ஏப்ரல், மே மாசத்துல விடுமுறை விட்டாகூட, என் அப்பா கிட்ட சண்டை போட்டுக்கிட்டு, மாமாகூட ஷூட்டிங் போயிடுவேன்.
சினிமாவுக்கு நான் வந்தப்போ, புலியூர் சரோஜா, தாரா மாஸ்டர்னு ஒரு நாலஞ்சு பேர் தான் டான்ஸ் மாஸ்டரா இருந்தாங்க. எனக்கு அப்போ சின்னப் பொண்ணு. அதனால, பெருசா எதுவும் தெரியாது. ஆனா, ரகு மாஸ்டர் கிட்ட உதவியாளரா இருந்ததால, டான்ஸ பத்தி எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும், சினிமாவுக்குள்ள வரும்போது எனக்கும் நிறைய கஷ்டங்கள் இருந்துச்சு.
என் திறமை மட்டுமே
ரகு மாஸ்டர் எப்போதும் என்கிட்ட, “நீ என் உதவியாளர்னு சொல்லி எந்த வாய்ப்பும் கேட்கக்கூடாது”ன்னு சொல்வாரு. என் திறமையால மட்டும்தான் நான் முன்னேறணும்னு அவர் உறுதியா இருந்தாரு. அதனால, ஒவ்வொரு சினிமா ஆபிஸா ஏறி, இறங்கித்தான் வாய்ப்பு தேடுனோம். எங்க டான்ஸ் மூலமாத்தான் மெதுவா ஒவ்வொரு படியா நாங்க மேல வந்தோம்.
அப்போதெல்லாம் பெண்கள் கேமராவுக்குப் பின்னாடி விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் இருந்தாங்க. ஆனா, இப்ப ஒரு ஷூட்டிங்ல 100 பேர் இருந்தா, அதுல பாதிக்குப் பாதி பெண்கள் நிறைஞ்சிருக்காங்க. இது ஒரு நல்ல முன்னேற்றம்னுதான் நான் சொல்லுவேன்’, இப்படி பல விஷயங்களை கலா மாஸ்டர் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.