முனைவர் கமல.செல்வராஜ்
(கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினத்தையொட்டி (நவம்பர் 29) இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது)
“ஒரு நல்ல நாட்டுக்கு முதல்லே என்னவேணும் தெரியுமா? உணவு என்பீங்க! இல்லை, உடை என்பீங்க! இல்லை. முதல்லே வேண்டியது - சிரிப்பு! ஆமாம்! சிரிப்புதான் முதலே வேணும்! அப்புறம்தான் உணவு, உடை அதெல்லாம் அப்படீன்னு நான் சொல்லலே! ரெம்ப பெரியவங்க எல்லாம் சொல்லியிருக்காங்க. ஒரு டாக்டர் சொல்லியிருக்காரு, நல்லா சிரிச்சிட்டா வியாதி வராதாம்! சிருப்பு ஒரு மருந்து: நம்ம வாழ்க்கைத் துயரத்துக்கெல்லாம் நல்ல மருந்து! அதனாலேதான் நீங்க சிரிக்கச் சிரிக்க எனக்கு ஆனந்தம்! ரெம்ப ஆனந்தம்! அதலே எனக்கு பெருமை… ஏன்னா நான் வந்தேனோ இல்லியோ, நீங்க சிரிச்சிட்டீங்க! நான் உங்களைச் சிரிக்க வைக்கிறேனே… அது, எனக்குப் பெருமைதானே. மக்களைச் சிரிக்க வைப்பது ஒரு தொண்டு! அப்படீன்ன, நான் தேசத்துக்குப் பெரியத் தொண்டு செய்த மாதிரி! மாதிரி என்ன மாதிரி தொண்டு செய்கிறேன்! அதனாலே நானும் ஒரு தேசத் தொண்டேன்னு சொல்லுங்க. நீங்க சொல்லாட்டி நானே சொல்லிக்கறேன்.”
“என்னப்பா, கிருஷ்ணன் ஐயாயிரம் வாங்குறான் பத்தாயிரம் வாங்குகிறான்… அவனுக்கு சினிமாவிலே அது கொடுக்கிறாங்க… இது கொடுக்கிறாங்க … என்று நீங்க சொல்லலாம். ஆனா, நான் சொல்றேன், எனக்கு அதெல்லாம் லட்சியம் இல்லே. எனக்கு முக்கியம் சந்தோஷம்தான்! நான் சந்தோஷப்படணும், மத்தவங்களையும் சந்தோஷப்படுத்தணும், அது தவிர பணம் சம்பாதிச்சுடணும். மாடிகட்டணும். ஏரோபிளேன்ல ஏறி ஆகாசமெல்லாம் பறக்கணும் என்கிற ஆசை எனக்கில்லை. இப்போ, சொல்லுங்க… நான் ஒரு தேச பக்தனா இல்லியா?
“எல்லா பிறவிங்கள்லேயும் மானிடப் பிறவிதான் ரொம்பச் சிறந்ததுன்னு சொல்றாங்க. அரிதரிது மானிடராய்ப் பிறப்பரிதுன்னு பாட்டுக்கூட இருக்குது. ஆனா, மனிதன் எதிலே சிறந்தவன்? புலி – மனிதனை விட ரொம்ப அழகா இருக்கு. குரங்கு நம்ம விட நல்லா நடக்குது! குருவி – நம்மைவிட நல்லா கூடு கட்டுது! மனிதன் உயர்ந்தவன் என்றால் அழகால் அல்ல. நடையால் அல்ல. திறமையால் அல்ல… சிரிப்பால்! மனிதன் சிரிக்கத் தெரிந்தவன்! ஆகவே மனிதன் உயர்ந்தவன்! மற்ற பிராணிகளுக்கும் சந்தோஷம் உண்டு! ஆனா, சிரிக்கத் தெரியாது.”
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
நாய் கூட ஆனந்தத்திலே வாலை ஆட்டுது, ஆனா, சிரிக்காது! மனிதன் ஒருத்தனுக்குத்தான் சிரிக்கத் தெரியும். இந்தச் சிரிப்பு இருக்குதே அது எங்கே இருந்து வருது நல்ல மனசிலே இருந்து வருது! ஆகவே மனுசனுக்கு மனசு இருக்குது! அதனால்தான் அவன் சிரிக்கிறான். ஆகவேதான் மனுசன் உயர்ந்தவனாகிறான்.”
சிரிப்பைப் பற்றி இப்படி நீண்ட நெடிய ஒரு விளக்கத்தைக் கொடுத்திருப்பது யாரென்று யோசிக்கிறீர்களா? அவர்தான் நம் நாட்டில் சினிமாத்துறைக்கு முன்னோடியாக விளங்கிய நாடகத்துறையில் நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்து மக்கள் மனங்களிலெல்லாம் என்றும் நீங்கா இடம் பிடித்து தன் சிந்தனையாலும், சொல்லாலும் வையகம் முழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘சிரிப்பு மேதை’, ‘வள்ளல்’, ‘கலைவாணர்’ என்றெல்லாம் கலைத்துறையால் போற்றிப் புகழப்படும் நாஞ்சில் சுடலையாண்டி கிருஷ்ணன் என்னும் என்.எஸ். கிருஷ்ணன்.
1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் நாள் சென்னை, பச்சையப்பன் கல்லூரி தமிழ் மன்ற ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய போதுதான் சிரிப்பு பற்றி இப்படியொரு அற்புதமான விளக்கத்தை கொடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார்.
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”
என்னும் பொய்யா மொழிக்கேற்ப ஓர் ஒப்பாரும் மிக்காரும் இல்லா நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், பேச்சாளர் என பன்முக ஆளுமைத் தன்மையைத் தன்னகத்தேக் கொண்டு 1908 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 29 ஆம் நாள் முக்கடலும் சங்கமித்து முத்தமிழும் தழைத்தோங்கும் கன்னியாகுமரி மாவட்டம் தலைநகராம் நாகர்கோவிலில் சுடலையாண்டி, இசக்கியம்மாள் தம்பதியரின் முத்தான மூன்றாவது மகனாக வையகம் கண்டார் என்.எஸ். கிருஷ்ணன்.
குழந்தைப் பருவத்தில் பெற்றோரால் ‘கிட்டன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த என்.எஸ்.கிருஷ்ணன் தனது அளப்பரிய நடிப்பு திறத்தால் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தாலும் கேட்போரை சுண்டியிழுக்கும் காந்த சக்திவாய்ந்த நகைச்சுவை பேச்சாற்றலால் மக்கள் அனைவரையும் மதிமயங்கச் செய்ததாலும் 1947 இல் சென்னை திருவல்லிக்கேணியில் அன்றைய சட்டமன்ற சபாநாயகர் சிவசண்முகம் தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார் என்.எஸ். கிருஷ்ணனுக்கு கலைவாணர் என்ற சிறப்புப்பெயரை வழங்கி கௌரவித்தார்.
தனது பேச்சும் நடிப்பும் மட்டுமல்ல அவரை இந்த அளவிற்குக் குன்றிலிட்ட விளக்காக ஜொலிக்க வைத்தவை. அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னின்ற சில முதன்மை குணாதிசையங்களும் உண்டு.
தமிழ் சினிமா உலகில் தன்னை நாடி வந்தவர்களுக்கு வாரிவாரி வழங்கிய வள்ளல் தன்மை. நாடக மேடைகளிலும் திரையுலகிலும் சீர்த்திருத்தக் கருத்துகளைப் பேசிய முதல் தமிழ் நடிகர். தமிழ் திரையுலகில் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் விதத்தில் நகைச்சுவை காட்சிகளை அரங்கேற்றிய முதல் நகைச்சுவை நடிகர். நகைச்சுவை நடிகரோடு தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தையும் முதல் முதலில் பெற்றவர். தமிழ் சினிமாவில் காமெடி ஜோடி முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர். அறிவியல் அற்புதக் கருத்துகளைத் திரைப்படங்களில் புகுத்தி மக்களின் அறியாமை இருளை அகற்றிய பெருமைப் பெற்றவர்.
படிப்போரையும் கேட்போரையும் அதிசயிக்க வைக்கும் இந்தக் குணாதிசயங்களின் சொந்தக்காரர் பிறந்ததொன்றும் மாடமாளிகையில் அல்ல. கோடீஸ்வரக் குடும்பத்திலும் அல்ல. சாதாரணக் குடும்பம். வறுமைத் தாண்டவமாடிக் கொண்டிருந்தக் குடும்பம். அப்படியென்றால், எப்படிப் பள்ளிக் கல்லூரிகளில் சென்று படித்துப் பட்டங்களையும் பதவிகளையும் அடைய முடியும்? எனவே, கிட்டனின் படிப்பு நான்காம் வருப்புக்கு மேல் கிட்டாமல் போய் எட்டாக்கனியானது.
பள்ளிப்படிப்பு எட்டாக்கனியாகிய தன் பிள்ளை இனி வெட்டியனாகி விடுவானோ என்ற அச்சம் தன் பெற்றோரை ஆட்கொண்டது. அந்த அச்சத்தை நீடிக்க விடவில்லை இந்தக் கிட்டன். சிறு வயதிலிருந்தே கிட்டனுக்கு நாடகங்கள் பார்ப்பதும், நாடகங்களில் நடிப்பதிலும் அப்படியொரு கொள்ளை ஆசை. அதனால், படிப்பை விட்டக் கிட்டன், அப்படியே தன் வீட்டருகில், கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதி பெயரில் இருந்த நாடகக் கொட்டகை கேன்டீனில் வேலைக்குச் சேர்ந்தான்.
காசு கொடுத்து, டிக்கெட் எடுத்து நாடகம் பார்க்க முடியாமல் ஏங்கித் தவித்த கிட்டனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேலைக்குப் போகாமல் ஓய்வாய் இருக்கும் நேரங்களில் தன் தோழர்களை அழைத்து தானே கதை எழுதி அவற்றை நாடகமாகத் தன் வீட்டுத் திண்ணையிலையே நடிப்பதை வாடிக்கையாகக் கொண்டான் கிட்டன்.
கிட்டனுக்குள்ளே கிளர்ந்தெழுந்த நாடக மோகமும், தாகமும் பின்னாளில் அன்று தமிழகத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்த டி.கே.எஸ். நாடகக்குழுவின் பிரதான நகைச்சுவை நடிகராக்கியது.
நாடகக் குழுவில் நடிகராகச் சேர்ந்த அவர், அங்கு ஒரு நடிகராக மட்டும் இருக்கவில்லை. பாடல்களைப் பாடுவது மிருதங்கம் வாசிப்பது, ஆர்மோனியம் இசைப்பது, பரதநாட்டியத்துக்கான சொற்கட்டுகளைக் கூறுவது, ஓவியம் தீட்டுவது., ஆடை அலங்காரம் செய்வது என சட்டென பல்துறை வித்தகரானார் கிட்டன். இதனால், வேறு பல நாடகக் கம்பெனிகளும் கிட்டனைத் தேடி வந்து தட்டிச் செல்ல முயற்சித்தன. காலத்தின் கோலத்திற்கேற்ப கிட்டன் தன்னை நாடி தேடி வந்த பல நாடகக் கம்பெனிகளிலும் நடித்து பிரபலமாகிவிட்டார். அதன் விளைவு அவரை உள்ளூரிலும் உள்நாட்டிலும் மட்டுமல்ல நடிகராக்கியது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் நாடகம் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அங்கெல்லாம் தனக்கென நடிப்பில் ஒரு முத்திரையைப் பதித்து வெற்றிகொடி நாட்டினார்.
இவற்றையெல்லாம் கண்ணுற்ற கிருஷ்ணனின் நண்பர்கள், அவரின் நடிப்புத்திறனைப் பாராட்டி ஒரு விழா எடுத்தனர். அந்த விழாவில், அப்போது பெயரும் புகழும் பெற்று விளங்கிய கோட்டார் சதாவதானி செய்குத்தம்பி பாவலர், என்.எஸ், கிருஷ்ணனைப் பாராட்டித் தங்கப்பதக்கம் வழங்கினார். அப்போது, அவர் “நம் நாஞ்சில்நாட்டு இளம்சிங்கம் கிருஷ்னன் வருங்காலத்தில் மகா மேதையாக விளங்கப்போகிறான். அவனுடைய புகழால் வருங்காலத்தில் நம் நாஞ்சில்நாடு மட்டுமல்லாது, தமிழ்நாடே பெருமையடையப் போகிறது: என வாழ்த்தினார். அன்றைய, அந்தத் தீர்க்கத்தரிசனமான வாழ்த்து இன்றும் கலைவாணரின் கீர்த்திக்கு மணிமகுடமாக விளங்குகிறது.
அறிவியல் வளர்ச்சியும் கால மாற்றமும் நாடகத்துறையை பின்னுக்குத் தள்ளிவிட்டு சினிமாத்துறையை முன்னிறுத்தத் தொடங்கியது. அத்துறையிலும் கிருஷ்னன் முன்னணியில் இருந்தார்.
நாடகத்துறையில் அவருக்கிருந்த பழுத்த அனுபவம் சினிமாத்துறையில் சுலபமாக வெற்றி பெறுவதற்கு வழிவகுத்தது. சினிமாத்துறையில் அவர் வெறும் ஒரு நடிகராக மட்டும் தொடரவில்லை. படத் தயாரிப்பாளராகவும் உயர்ந்து விட்டார். இதனால் 1939 இல் அசோகா பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாகப் பட நிறுவனம் ஒன்றை கிருஷ்ணன் ஆரம்பித்தார். அதன் மூலம் அன்று பிரபலமான பல திரைப்படங்களைத் தயாரித்து திரையிட்டு வெற்றிவாகைச் சூடினார்.
நடிப்பு திறனில் மட்டும்தான் என்,எஸ்.கே இமயத்தை எட்டிவிட்டார் என எண்ணிவிட்டால் அது தவறாகி விடும். நகைச்சுவைப் பேச்சிலும் அவர் தன்னிகரின்றி விளங்கினார் என்பதற்கு எண்ணிலாச் சான்றுகள் உள்ளன.
எழுத்தாளர்கள் சேர்ந்து நடத்திய மாநாடு ஒன்றில் கலைவாணரான ‘நாவல்லாளரை’ அழைத்துப் பேச வைத்தனர். விட்டு வைத்தாரா கிட்டன். எழுத்தாளர்களை எப்படி வெளிப்படுத்தினார் தெரியுமா? தனது நா வல்லமையை “எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட ‘மை’ யைத் தொட்டு எழுதிகிறார்கள் தெரியுமா? சிலர் பெரு ‘மை’ யில் எழுதுகிறார்கள். வேறுசிலர் பொறா ‘மை’ யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெரு ‘மை’ யைத் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழ ‘மை’ யிலும் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மைகள் மடமை, கயமை. பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழத வேண்டும்.
எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய ‘மை’ கள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும் எனப் பேசினார். இதனால் எழுத்தாளர்கள் கிருஷ்ணனை அழைத்ததுப் பெருமை என எண்ணி மகிழ்ந்தனர்.
இது போலவே ஒரு முறை கலைவாணரைப் பெண்கள் கூடி நடத்திய கூட்டத்திற்கு அழைத்திருந்தனர். அக்கூட்டத்திற்கு அவரும் மனைவி மதுரமும் சேர்ந்து சென்றிருந்தனர். அங்கே அவர் பேசத் தொடங்கினார் “சகோதரிகளே! தாய்மார்களே! நீங்கள் எல்லோருமே பூ வச்சிருக்கீங்க, சிலபேரு ரோஜாப்பூ வச்சிருக்கீங்க, சிலர் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் என்று பலவகையான பூக்களை வச்சிருக்கீங்க . அதனாலேயே பெண்களுக்கு பூவையர் என்று பெயர் இந்தப் பூக்கள் எல்லாம் இன்னிங்கு வைச்சா நாளைக்குத் தூக்கி எறிய வேண்டியப் பூக்கள். இதெல்லாம் மலரும் பூக்கள், மலர்ந்த மறு நாளே வாடும். வாடாமல் வளரும் பூவே சிறந்த பூ. அந்தச் சிறந்த பூ என்ன பூவென்னு சொல்லுங்கப் பார்க்கலாம்” என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களைப் பார்த்துக் கேட்டார்.
பலரும் விழித்தனர். கேட்பவர் நகைச்சுவை மன்னர் என்பதால் ஒரு பெண் “சிரிப்பு” என்றார், கலைவாணர் புன்முறுவல் பூத்தார். தான் சரியான விடை கூறிவிட்டதாக அந்தப் பெண்ணும் சிரித்தார். கூட்டத்தினரும் சிரித்தனர்.
அடுத்து, கலைவாணர், “பாத்தீர்களா! இதுவும் ஓரளவிற்கு வளரும் பூதான். ஆனால், தொடர்ந்து வளராது. இதோ பேச ஆரம்பிச்சதும் நின்னிருச்சு, நிக்காம தடைபடாமல், வளந்துகிட்டேயிருக்கிற பூ “சேமிப்பூ”தான்.
ஒரளவு நீங்க சேமிப்பு செய்து விட்டு அப்படியே விட்டுவிட்டால் கூட வட்டியின் மூலம் அது வளரும். ஆகையால், சேமிப்புதான் சிறப்பூ, பெண்களாகிய நீங்கள் சேமிக்கத் தொடங்கணுமுங்கிறதை வற்புறுத்தத்தான் இந்தக் கூட்டம். ஆகவே, சேமிப்பே சிறந்த பூ” என்று கூறி முடித்தார்.
இப்படி, இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை அறிந்து, உணர்ந்து அதற்கு ஏற்ப சமயோஜிதமாய் பேசி, கேட்போரை ஒரு சில நிமிடம் மெய் மறக்கச் செய்யும் வல்லமை இந்த கிருஷ்ணனைத் தவிர வேறு எந்த கிருஷ்ணர்களுக்கு வரும் என்பது இன்றளவும் கேள்விக் குறியே. இதனால்தான்,
கலைவாணரின் இத்தனை அருங்குணங்களையும் நன்குணர்ந்த அறிஞர் வ.ரா-, கலைவாணரை பற்றி குறிப்பிடும் போது
“தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் மகான் என்.எஸ்.கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தை சில நிமிடங்களுக்கேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொதுநன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை” என்கிறார். இது முழுக்க முழுக்க உண்மையானக் கருத்தே ஆகும்.
இப்படி நடிப்பு, பேச்சு, பாட்டு எனப் பன்முக மூச்சோடு வாழ்ந்த கலைவாணரின் பேச்சும் மூச்சும் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதியோடு முற்றுப்பெற்றது.
இப்படிப்பட்ட கலைவாணரை இதுவரை முந்திச் செல்லவோ அல்லது பின்னுக்குத் தள்ளவோ எவரும் பிறக்கவில்லை என்பதுதான் விந்தை. அதுவே உண்மை.
(கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.