காளியம்மாளின் சொந்த ஊர் நாகப்பட்டினம். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்.
பி.காம் பட்டதாரியான காளியம்மாள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைக்க, பின் அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் சேர்ந்தார். இன்று நாம் தமிழர் கட்சியின் மிகச்சிறந்த பேச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
காளியம்மாள் ஒரு அரசியல்வாதியாக பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை காதல், திருமணம், கணவர், குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாது.
சமீபத்தில் காளியம்மாள் தன் கணவருடன் சேர்ந்து BigNews Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய சொந்த வாழ்க்கைக் குறித்து பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
”காளியம்மா எனக்கு நல்ல ஃபிரெண்ட். கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி முதல்முறை காளியம்மாவ சந்திக்கும் போது, ஒரு கிராமத்துக்கு என்னை கூட்டிட்டு போனாங்க. அங்க வயசானவங்க, என்னை மாதிரி பசங்க நிறைய இருந்தாங்க. வர்றவங்க எல்லாரும் காளியம்மாவ பாத்து வணக்கம் சொல்லி கையெழுத்து கும்பிட்டாங்க. அதை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.
அவுங்கக் கூட நானும் போகும் போது என்னையும் வாங்க சார், உட்காருங்க சார் சொன்னாங்க.. என்னடா நம்மளை பாத்தெல்லாம் சார்னு சொல்றாங்க ஆச்சரியமா பாத்தேன்.
நான், காளியம்மா கிட்ட நீங்க என்னதான் பண்ணீங்க, ஏன் உங்களை பார்த்து கையெழுத்து கும்பிடுறாங்கனு கேட்டேன்.
அப்போ காளியம்மா நான் என்.ஜி.ஓ.ல வேலை பார்க்கிறேன் பெண்களுக்கு சுயதொழில் பண்றதுக்கு உதவி பண்ணுவேன் சொன்னாங்க. ஒருத்தங்களுக்கு வாடகை, சமையல் பாத்திரம் வாங்கிக் கொடுத்துருக்காங்க, ஒருத்தங்களுக்கு கோழிப்பண்ணை எல்லாம் வச்சுக் கொடுத்துருக்காங்க. இப்படி நிறைய வேலை செய்ஞ்சுட்டு இருந்தாங்க..
அப்போ நான் ரொம்ப ஆச்சரியமா பார்த்தேன். இவுங்கக் கூட எல்லாம் பழகுறது நமக்கு பெருமையா இருக்கும் தோணும்.
அப்படிதான் ஒருநாள் பேசிட்டு இருக்கும் போது நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் சாதரணமா கேட்டது தான். வேற என் மனசுலயும் ஒன்னும் கிடையாது, அவுங்க மனசுலயும் ஒன்னும் கிடையாது. வீட்டுல பேசுனோம். ஒத்துக்கிட்டாங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டோம்…
கல்யாணம் அப்போ என்னடா மாப்பிளை வெள்ளையா இருக்காரு, பொண்ணு கருப்பா இருக்குனு பேசுனாங்க, அப்போ நான் அந்த பொண்ணோட அறிவு என்னனு தெரியுமா? அவுங்களோட படிப்பு என்ன தெரியுமா? இந்தமாதிரி ஒரு பொண்ண நீங்க தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது, சொன்னேன்.
இப்போ அரசியல்வாதி கருத்து ரீதியா எதிர்க்க மாட்டுக்கான். வன்முறைய கையில எடுக்கிறான். அந்த மாதிரி நேரங்கள்ல நான் கடலுக்கு போறது விட்டு இவுங்க கூட பயணிச்சுட்டு இருப்பேன்.
சில நேரம் ரொம்ப வருத்தமா இருக்கும். என்னடா இந்த மக்களுக்காக தான் பேசிட்டு இருக்காங்க. மக்களுக்கு புரிய மாட்டேங்குது. மக்களும் சரியான நபருக்கு வாக்களிச்சா அரசியல் மாற்றம் வரும். வருங்காலத்துல ஒரு நல்ல அரசியல் நடக்கும் தோணும், என்றார் பிரகாஷ்….
காளிம்மாள் பேசும் போது, ’நான் வேலைக்கு போயிட்டு இருக்கும் போதுதான் எனக்கு திருமணம் ஆச்சு. அரசியலுக்கு நான் விருப்பப்பட்டு வரல. அதுக்கு என் வீட்டுக்காரர் தான் காரணம். ஒரு பெண்ணா நான் பொதுவாழ்க்கையில இருக்குறதுக்கு குடும்ப ஆதரவு ரொம்ப முக்கியம். அது என் கணவர் எனக்கு கொடுக்கிறாரு..
அரசியல்ல என்னைய வச்சு நிறைய அவதூறா பேசிருக்காங்க. நைட் தூங்கும் போதுகூட தேவையில்லா போன் வரும். நான் இறந்து போயிட்டதா ஒரு போஸ்டர் டிசைன் பண்ணி வாட்ஸ் ஆப்ல போட்டாங்க.. அதை இவுங்க கிட்ட சொல்லும்போது பெரிசா எடுத்துக்கல. அதையெல்லாம் தூக்கி தூரப்போடுனு சொல்லிட்டாங்க… இப்படி பல விஷயங்களை காளியம்மாளும், அவரது கணவர் பிரகாஷூம் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டனர்….
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.