உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்வாகக் கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று (மே 12) காலை 6 மணிக்கு மிகுந்த பக்திச் சூழலுடன் நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகர், வைகை ஆற்றில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெற்குமாசி வீதியிலுள்ள அருள்மிகு வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து அழகரை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. ராமராயர் மண்டகப்படியில் திரளாகக் கூடிய பக்தர்கள், கோஷமிட்டு “கோவிந்தா... கோவிந்தா...” என அழகரை வழிபட்டனர். கருப்பசாமி வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தண்ணீர் பீசியும் செலுத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/b188793b-85a.jpg)
ஆழ்வார்புரம் பகுதியில் அமைக்கப்பட்ட மண்டகப்பதி, 2 டன்னுக்கும் அதிகமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்புக்காக மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 4000-க்கும் மேற்பட்ட போலீசார், 400 கண்காணிப்புக் கேமராக்கள், மற்றும் ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்றிரவு இரவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் கள்ளழகரை விடிய விடிய பொதுமக்கள் தரிசிக்கவுள்ளனர். அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை (மே 13-ம் தேதி) காலை அங்கிருந்து வண்டியூர் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனமும், நாரைக்கு முக்தியும் அளிக்கிறார். அங்கிருந்து இரவில் ராமராயர் மண்டகப்படிக்கு சென்று எழுந்தருளியதும், விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை (மே 14 ஆம் தேதி) ராமராயர் மண்டகப்படியில் இருந்து புறப்பாடாகி வைகை திருக்கண், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் வழியாக தல்லாகுளம் சேதுபதி மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருள்வார். மே 14 ஆம் தேதி இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், மே 15-ம் தேதி காலை அழகர்மலை நோக்கி பல்லக்கில் புறப்பாடாகிறார்.