கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில், கடந்த வியாழக்கிழமை ஏ.சி மெஷின் (குளிரூட்டி) வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர். ஏ.சி-யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது கோடைக்காலம் என்பதால், ஏ.சி-யின் பயன்பாடு அதிகமாக வரும் நிலையில், இதுபோல ஏ.சி தீப்பிடித்து வெடிப்பதற்கான காரணம் என்ன? என்பது பற்றியும், எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.
கோடையில் ஏ.சி தீப்பிடித்து வெடிப்பதற்கான காரணம்
ஏ.சி-யின் கண்டன்ஸரில் உருவாகும் அதீத வெப்பமோ அல்லது கம்ப்ரஸரில் உருவாகும் அதீத அழுத்தமோ தீப்பிடிக்க ஒரு காரணமாக இருக்கலாம். நம் பார்வைக்குத் தெரியும்படி இருக்கும் கண்டன்ஸர் பகுதியில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். வீட்டுக்கு வெளியே இருக்கும் கம்ப்ரஸர் மற்றும் கண்டன்ஸர் அமைப்பில் பழுது ஏற்பட்டால், தீ விபத்து ஏற்படக்கூடும். வெப்பத்தால் காயில்களில் உள்ள வெல்டிங்குகளில் விரிசல் ஏற்படலாம். அதனால், அதிக அழுத்தத்தால் கம்ப்ரஸர் வெடிக்கும் நிலை ஏற்படலாம்.
ஏ.சி-களில் தரம் உயர்ந்த காப்பரையே பயன்படுத்தினார்கள். எனவே, அவை அதிக காலத்துக்குப் பிரச்னை இல்லாமல் உழைத்தன. ஆனால், சமீப காலமாக நிறுவனங்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அலுமினியத்தைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
இவை வெப்பம் அதிகமான காணப்படும் நகரங்களுக்கு ஏற்றவையாக இருக்காது. இருப்பினும், தற்போது அலுமினியம் பயன்படுத்துவதைக் குறைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது போல தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தும் ஏ.சிகளில் விபத்து அதிகமாக ஏற்படுகிறது. மேலும், கோடைக் காலங்களில் ஏ.சிகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதும், வெளிப்புறத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதும் விபத்து நிகழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்புகள் உண்டு.
தவிர்ப்பது எப்படி?
ஏ.சி-யில் உள்ள ஃபில்டர்களை 10 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும்போது உள்ளே இருக்கும் சர்க்யூட் போர்டில் தண்ணீர் படாதவாறு பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
சிறிய அளவில் பிரச்னை என்று தெரிந்தால் கூட சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்ல வேண்டும். அல்லது ஏ.சி பழுது பார்ப்பவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
ஏ.சிக்கு கட்டாயமாக ஸ்டெபிலைசரை பொருத்த வேண்டும்.
குறைந்த விலைக்கு கிடைக்கும் தரமற்ற ஏ.சி-களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
ஏ.சி-யை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“