அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது பூர்வீக ஊரான திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கமலா ஹாரிசின் பூர்வீக கிராமத்தில் குல தெய்வ கோயிலில் வழிபாடு
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
கமலா ஹாரிஸ்:ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவருக்கும் இந்திய தாய்க்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவில் பிறந்த கமலா ஹாரிஸ் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு செனட் சபையின் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை அறிவித்தார். இங்கிருந்து இவரது அரசியல் பயணம் தொடங்கியது என்று கூறலாம்.மேலும் இத்தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அதிபரானால், அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் அதிபர் என்ற பெயர் கிடைக்கும்.
கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்விகம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் என்ற கிராமம் தான். இதனாலேயே கிராம வாசிகள் கமலா ஹாரிஸின் வெற்றியை கொண்டாட தயாராகி வருகின்றனர். 2020 ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வானபோதும் இவ்வூர் மக்கள் பேனர்கள் வைத்து கொண்டாடினர்.
இந்நிலையில் மீண்டும் கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிடுவதையொட்டி அவர் வெற்றி பெற வேண்டும் என துளசேந்திரபுர மக்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு பூஜையில் வெளிநாட்டு பெண்கள் கமலா ஹாரிஸ் பெயர் பொதித்த ஆடை அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கிராம மக்கள், உள்ளூர் வாசிகள் பலர் பங்கேற்றனர்.
கோயிலுக்கு வெளியே கிராம மக்கள் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பெரிய பேனர் வைத்து அதில் மண்ணின் மகள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“