காமராஜர் பிறந்தநாள்: 120 குழந்தைகள் வேடமிட்டு கல்வி ஓவியமாக நின்று அசத்தல்
கோவையில் காமராஜர் வேடமிட்ட 120 பள்ளிக்குழந்தைகள் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட கல்வி மற்றும் கண் ஓவியமாக அணி வகுத்து நின்று அசத்தினர்.
கல்வி கண் திறந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினத்தை கல்வியின் பெருமை மற்றும் அவசியம் குறித்து கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 120 மாணவ,மாணவிகள் கல்வி கண் திறந்த காமராஜரை நினைவு கூறும் வகையில் கண் மற்றும் கல்வி ஓவியமாக அணி வகுத்து நின்றனர்.
வெள்ளை சட்டை,வேஷ்டி,தோளில் துண்டுடன் தத்ரூபமாக காமராஜர் வேடமிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக நின்ற கல்வி கண் ஓவியம் கல்வியின் பெருமையையும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கிய காமராஜரின் பெருமையையும் உணர்த்துவதாக இருந்தது.தொடர்ந்து கூடியிருந்த மாணவ,மாணவிகள் மூடியிருந்த கண்கள் திறக்கும் படி அசைவுகள் செய்து அசத்தினர்..
முன்னதாக காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாணவ,மாணவிகள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வந்த பயன்படுத்திய நல்ல ஆடைகளை தானமாக பள்ளியில் வைத்திருந்த பெட்டியில் இட்டனர்.
இவ்வாறு ஆசிரிய,ஆசிரியைகள்,பொதுமக்கள்,மாணவ,மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆடைகளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இலவச விற்பனையகத்திற்கு வழங்க உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil