கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று (ஜூலை 15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளில் கல்வியின் பெருமை மற்றும் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்நாளை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் உள்ள (தனியார்) ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் கா்ம வீரர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 122 சிறுவர், சிறுமிகள் கல்வி கண் திறந்த காமராஜரை நினைவு கூறும் விதமாக அவரை போல வேடமிட்டு இருந்தனர்.
சிறுவர்களுக்கு போட்டியாக சிறுமிகளும் வெள்ளை சட்டை, வேஷ்டி, தோளில் துண்டுடன் வெள்ளை மீசையுடன் தத்ரூபமாக காமராஜரை போல வேடமிட்டபடி வந்தனர். தொடர்ந்து பள்ளி மைதானத்தில் 122 குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக வலம் வந்து, காமராஜர் ஓவியமாக தத்ரூபமாக அணிவகுத்து நின்றனர், தொடர்ந்து அனைவரும் கல்வி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய காமராஜர் ஓவியம் கல்வியின் பெருமையையும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கிய காமராஜரின் பெருமையையும் உணர்த்துவதாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“