ஒரு நீர் நிலையை கடக்கும் இன்னொரு கால்வாய்; காமராஜரின் தொலைநோக்கு பார்வையை பறைசாற்றும் கன்னியாகுமரி தொட்டிப் பாலம் (புகைப்படம்: முகநூல் பதிவு – திருவட்டாறு சிந்துகுமார்)
ஒரு நீர் நிலையை இன்னொரு கால்வாய் கடக்கும் வகையில், காமராஜர் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுத்திய திட்டம் குறித்த தகவலை ஊடகவியலாளர் திருவட்டாறு சிந்துகுமார் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Advertisment
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாள் நேற்று (ஜூலை 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளிகளை ஏற்படுத்தியும், மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியும் கல்விக்கு காமராஜர் ஆற்றிய அளப்பரிய தொண்டு காரணமாக அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. காமராஜரை கல்விக்காக மட்டுமல்லாமல் அரசியல், சமூகம் போன்ற பல்வேறு தளங்களிலும் எல்லோரும் போற்றி வருகின்றனர். குறிப்பாக பொதுப்பணி எனும் குடிமராமத்து பணிகளில் அவர் செய்த அற்புதங்கள் இன்றளவும் அவர் பெயரை பறைசாற்றி வருகின்றன.
அந்தவகையில் பொதுப்பணித்துறையில் அவர் தொலைநோக்கு பார்வையுடன் செய்த திட்டம் பற்றிய தகவலை ஊடகவியலாளர் திருவட்டாறு சிந்துகுமார் தனது முகநூல் பதிவில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
Advertisment
Advertisements
’மாத்தூரில் தொட்டிப்பாலம் அமைத்த பாரதரத்னா காமராஜர்!’ என்ற தலைப்பில் திருவட்டாறு சிந்துகுமார் வெளியிட்டுள்ள பதிவு இங்கே.
ஆற்றைக் கடக்க பாலம் கட்டுவார்கள். ஆனால் ஒரு நீர் நிலையை கடக்க இன்னொரு பாலம் கட்டுவார்கள் என்றால்.. அதாவது ஒரு நீர் நிலையை இன்னொரு கால்வாய் கடக்கிறது என்றால் ஆச்சரியம்தானே..
கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டணம், கருங்கல், புதுக்கடை ஆகிய பூமி அடிப்படையில் மேடான பகுதி. இங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது இது அவரது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி சிற்றாறு அணையில் உள்ள தண்ணீரை கால்வாய் மூலமாக இந்தபகுதிகளுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. குறுக்கிட்டது பரளியாறு.
மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது தான் இந்த மாத்தூர் தொட்டிப்பாலம். இரண்டு மலைகளையும் இணைக்கும் இந்த இந்த பாலம் 1240 அடி நீளமும், தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 28 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 16 சதுர அடி சுற்றளவு கொண்டவை.
தண்ணீர் கொண்டு செல்லும் சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் தொட்டிப்பாலம் என பெயராம். தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி உயரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். 104 அடிக்கு கீழே பரளியாறு ஓடிக்கொண்டிருக்கும். தொட்டிப்பாலத்தின் இன்னொரு பகுதி நடைபாதையாக பயன்படுகிறது.
இந்தபாலம் ஆசியாவிலேயே மிகப் பெரிய தொட்டிப்பாலம். இந்த பாலம் சர்வதேச அளவில் அனைவரின் பார்வையை கவர்ந்து இபபோதும் அற்புதமாக காட்சி அளிக்கிறது.
இந்த தொட்டிப் பாலத்தின் மூலம் குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியினரின் விவசாயமும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது.
காமராஜரின் தொலைநோக்குப் பார்வை காரணமாகவே இந்த பாலம் இங்கு அமைந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை செழிப்புடன் வைத்திருக்கிறது. காலம் உள்ளவரை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் காமராஜரை மறக்க மாட்டார்கள்! ஓங்குக அவரது புகழ்!
இவ்வாறு ஊடகவியலாளர் திருவட்டாறு சிந்துகுமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.