/indian-express-tamil/media/media_files/2025/06/16/1Mc2mbLiydnBCqWMrVR9.jpg)
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மெயின்பஜாரில் 350 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த ஜூன் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் திருப்பலி நடைபெற்றது.
கடந்த 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேர் பவனி நடைபெற்றது. இதில் அந்தோணியார் தெரு, சவேரியார் தெரு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை திருப்பலி நடைபெற்று, அதன் பிறகு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு கூட்டுப் பிரார்த்தனை நடந்த பின்பு, கர்த்தநாதர் சுவாமி நினைவு அசன வைபவம் நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆலயப் பங்குத் தந்தையாக இருந்தவர் கர்த்தநாதர். இவர் இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நலனுக்காகவும் பணியாற்றியவர். அவர் மறைந்த பிறகு, இந்த ஆலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, புனித அந்தோணியார் தேர் பவனி முடிந்த கடைசி நாளன்று, வெள்ளாட்டுக் கிடாய்கள் பலியிடப்பட்டு பொது அசன அன்னதானம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு புனித அந்தோணியார் ஆலய பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளித்த 32 ஆட்டுக் கிடாய்கள் கர்த்தநாதர் நினைவிடம் முன்பு பலியிடப்பட்டன. இந்த ஆட்டிறைச்சியைப் பயன்படுத்தி 600 கிலோ கறி, 5 பெரிய அண்டாக்களில் சமைக்கப்பட்டது. மேலும், 1000 கிலோ அரிசி சாதமும் சமைக்கப்பட்டு, கர்த்தநாதர் முன்பு படைக்கப்பட்டது. அதன்பின்பு, பொதுமக்களுக்கு அசன அன்னதானம் விடிய விடிய நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை இந்த கறி விருந்து தொடர்ந்து நடைபெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.