/indian-express-tamil/media/media_files/2025/06/14/zS1ZyeHXsJliMi3RZSvx.jpg)
தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா - 2025 நேற்று (ஜூன் 13) கோலாகலமாகத் தொடங்கியது. ஜூன் 15 வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவை, தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்துச் உரையாற்றினார்.
இந்த விழாவில் பேசிய கனிமொழி எம்.பி., "நெய்தல் என்பது கடல் சார்ந்த மக்களின் நிலம் மட்டுமல்ல – அவர்களுடைய வாழ்வியலைக் குறிக்கும் ஒன்று. அதை கிராமிய கலைகள் என்றோ அல்லது மண் சார்ந்த கலைகள் என்றோ சொன்னாலும், அது உண்மையாகவே மக்களுடைய கலைகளாக இருக்கக்கூடிய ஒன்று.
நிதர்சன வாழ்க்கையை வெளிப்படுத்தக்கூடிய நம்முடைய மக்கள் கலைகளாக இருக்கும் கூத்து வடிவங்கள், கிராமிய இசைகள் போன்றவை, மக்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள், அவர்களுடைய போராட்டங்கள், அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சந்தோஷங்கள், அவர்கள் பார்க்கக்கூடிய விஷயங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். மலைப்பகுதியில் வாழும் மக்களின் பாடல்களில், அவர்கள் பார்க்கும் மரங்களின் பெயர்களும், சாப்பிடும் உணவுகளின் பெயர்களும், மேலும் அவர்களின் வாழ்க்கைமுறையும் இருக்கும். அதேபோல, நெய்தல் மக்களின் பாடல்களில், அவர்கள் பிடிக்கும் மீன் வகைகளும், அவர்களின் வாழ்க்கைமுறையும், பயன்படுத்தும் படகுகளும், வலைகளும் என இவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும்.
நம்முடைய வாழ்வியலை உள்ளடக்கிய ஒன்றுதான் இந்த மண் சார்ந்த கலைகள். அதை, நம்முடைய அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்களுடைய வாழ்வியலை உணர்ந்துகொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இக்கலை விழாவை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் தூத்துக்குடி மக்களுக்கும், எங்களுடைய மண் சார்ந்த கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உணவு இல்லாமல் எந்தத் திருவிழாவும் முழுமை பெறாது. எங்கள் கலைஞர்களுக்கு உங்கள் கரகோஷமும், வாழ்த்தும் அவர்களுக்கு மனநிறைவு தரும்" என்று கூறினார்.
இந்த நெய்தல் கலைத் திருவிழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.