Kannadasan Anniversary: முழு கீதையும் ஒரே பாடலில்... கண்ணதாசனை மறக்க முடியுமா?
இந்த படம் கிட்டத்தட்ட முடிந்த பிறகு, பந்தலுவுக்கு ஒரு யோசனை வந்தது, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் ஒரு காட்சியை வைத்தால் என்ன என்ற யோசனை தான் அது.
கண்ணதாசன் பல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவர். பாடலாசிரியராக, காலத்தால் அழியாத பல இனிமையானப் பாடல்களைத் தந்தார். ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தார்.
Advertisment
கண்ணதாசன் ஒருவருக்குத்தான் கற்பனைத் திறனுடன் கலந்து.. அற்புதமாய் வாழ்க்கைத் தத்துவங்களைப் படம்பிடிக்கும் வித்தை வாய்த்தது! அந்த வகையில் கண்ணதாசனை மிஞ்ச இன்னும் தமிழ்த் திரையில் வேறொருவர் பிறக்கவில்லை.
எத்தனை எத்தனையோ பாடல்கள்.. கண்ணதாசனின் கற்பனையில் வற்றாத நதியாய் ஊற்றெடுத்துக் கிளம்பின. அவரது பாடல் இடம்பெற்றதாலேயே தமிழின் பல வரிகளுக்குத் தனி கவுரவம் கிடைத்தது.
அதில் ஒரு அற்புத காவியம் தான் கர்ணன்…
கர்ணன் 1964ம் வருடம் வந்த படம், BR பந்தலு எடுத்த படங்களில் மிக அற்புதமான படம். இந்த படத்தில் மொத்தம்பன்னிரெண்டு பாடல்கள்.
இந்த படம் கிட்டத்தட்ட முடிந்த பிறகு, பந்தலுவுக்கு ஒரு யோசனை வந்தது, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் ஒரு காட்சியை வைத்தால் என்ன என்ற யோசனை தான் அது. இதுகுறித்து உதவி இயக்குனர்களுடன் விவாதித்தபோது அத்தனை பேரும், அதற்கு மறுத்து விட்டார்களாம்.
இது வேண்டாம், விபரீத எண்ணம். கீதையை சுருக்கமாக சொல்ல முடியாது,கதையின் நிறைவுப் பகுதியில் இப்படி ஒரு காட்சியை வைத்தால் அது நீண்ட காட்சியாகத் தான் இருக்கும். அது ஒரு தத்துவ உபதேசம், மக்களுக்கு அவ்வளவு எளிதில் புரியாது… என்றெல்லாம் சொன்னார்கள்…
ஆனாலும் பந்தலு கேட்கவில்லை.
பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்தில் எல்லாரும் கூடி இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தபோது இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் அங்கு வந்தார். பந்தலு சொன்ன யோசனையை, துணை இயக்குனர்கள் அவரிடம் எடுத்துச் சொன்னார்கள்.
சற்று நேரம் யோசித்த விஸ்வநாதன் முகம் திடீரென மலர்ந்தது. உடனே இந்த காட்சியை நன்றாக எடுத்து விடலாம், என்று சொல்லி இருக்கிறார்..
எப்படி என்று கேட்க, கண்ணதாசன் இருக்க கவலை ஏன்? நீங்கள் இதை ஒரு உபதேச காட்சியாக எடுத்தால் தான் எடுபடாது. கண்ணதாசனிடம் சொல்லுங்கள், ஒரே பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லி விடுவார்.
மூன்று நிமிடங்களுக்குள் பாட்டு முடிந்துவிடும், கீதையும் புரிந்துவிடும், என்றாராம்…
கண்ணதாசனிடம் இதை சொன்னதும் மறுநாளே பகவத் கீதை பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டார். அதுவும் எளிமையாக, பாமரனுக்கு கூட புரியும் வார்த்தைகளில்..
ஒரு ராகமாலிகையாய் விரிந்திருக்கும் இந்த பாடலினை, சீர்காழி கோவிந்தராஜன் மனம் உருகும் வகையில் பாடியிருப்பார்…
தமிழ் இசை உலகில் இந்த பாடல் ஒரு அதி அற்புதம்!
இதுகுறித்து VILARI யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“