நடுக்கடலில் 17 மணி நேரம் நீச்சலடித்தே, தன்னை காத்துக்கொண்ட குமரி மீனவர் சூசை மரியானை (62) ஆட்சியர் ஸ்ரீதர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் கோயா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், குமரி மாவட்டம் பள்ளம் மீனவர் கிராமத்தை சார்ந்த சூசை மரியான் உட்பட 19 மீனவர்கள் அக்டோபர் 10 ஆம் தேதி மாலையில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அன்று இரவு 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள். படகு ஓட்டுனர் டேவிட் படகை செலுத்திக் கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 4 மணி அளவில் சூசை மரியான் படகின் பின்புறம் சென்றுள்ளார்.
அப்போது அவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். சூசை மரியான் கடலில் விழுந்த சத்தம், ஓட்டுனருக்கு கேட்கவில்லை. கடலில் தத்தளித்த சூசை உதவிக்காக கத்தியுள்ளார். அதுவும் யாருக்கும் கேட்கவில்லை.
காலையில் சுமார் 5 மணி அளவில் தேநீர் அருந்துவதற்காக தூங்கிக் கொண்டிருந்த மீனவர்கள் எழும்பினர். அப்போது சூசை மரியான் படகில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக படகுகளுக்கு தொடர்பு கொண்டு மாயமான மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலாததால் இந்திய கடலோர காவல் படைக்கும், கேரளா கடலோர காவல் நிலையத்துக்கும், கேரளா மீன்வளத்துறை மீட்பு குழுவுக்கும் தகவல் கொடுத்து மாயமான மீனவர்களை தேடுவதற்கு உதவி கேட்டனர்.
மீனவர்களும் அரசு உபகரணங்களும் அன்று முழுவதும் தேடியும் மாயமான மீனவர் கிடைக்கவில்லை.
மீனவர்கள் விசைப் படகிலும் நாட்டுப் படகிலும் தன்னை தேடிக் கொண்டிருப்பது தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சூசைமரியானுக்கு பார்க்க முடிந்தது. ஆனால் இவர் எழுப்பிய குரல் தூரத்தில் தேடிக் கொண்டிருந்த யாருக்குமே கேட்கவே இல்லை.
ஏதாவது ஒரு படகின் கண்ணில் பட்டு கரை சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த சூசைமரியான், கடல் நீச்சலில் அவருக்கு இருந்த திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து 17 மணி நேரம் கடலுடன் போராடி இருக்கிறார்..
ஒருவழியாக அவரது போராட்டத்திற்கு பலன் கிடைத்தது.
குமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்த வர்க்கீஸ் என்பவருக்கு சொந்தமான 'ஆரோக்கிய மாதா என்னும் நாட்டு படகு சூசை மரியான் கண்களில் தென்பட வேகமாக படகை நோக்கி நீந்தியவரை, படகில் இருந்தவர்கள் பார்த்து விட்டனர். தொடர்ந்து அவரை நோக்கி படகை வேகமாக செலுத்தினர். அருகில் நெருங்கியதும் சூசை மரியனுக்கு கை கொடுத்து தூக்கி அவர்களது படகில் ஏற்றி கொண்டனர்.
அவருக்கு தண்ணீர் கொடுத்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு அதே படகில், வெம்பூர் துறைமுகத்திற்கு வந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மீனவர் சூசை மரியானை, நாட்டு படகு மீனவர்கள் காப்பாற்றிய தகவல் கேரளாவில் உள்ள தனியார் வானொலி எம்சிஆர் செய்தியில் வெளியானது. அவரது குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஊர் திரும்பிய சூசை மரியான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களை சந்தித்து விவரங்களை கூறினர்…
சூசைமரியானால் உடனடியாக மீன்பிடி தொழிலுக்கு செல்ல உடல் நிலை இடம் கொடுக்காது என்பதால் குடும்ப நிவாரணம் நிதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆட்சியர் ஸ்ரீதர், மீனவர் சூசை மரியான் 17 மணி நேரம் கடலில் போராடி தன்னை காத்துக் கொண்ட சூசைமரியானுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். இந்த சம்பவம் குமரி மீனவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: த.இ.தாகூர், குமரி மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.