இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக கன்னியாகுமரி மாவட்ட ராஜாவூரை சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் பிறந்தது கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ஒரு சிறிய கிராமம் இராஜாவூர்.
இந்நிலையில், இராஜாவூர் புனித மைக்கேல் திருமண மண்டபத்தில் இக்னேசியஸ் டெலோஸ் புளோராவுக்கு, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், ”ஓரே குடும்பத்தில் மூன்று ஆண்களும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவர்களின் கடைசி தங்கை, இக்னேசியஸ் டெலாஸ் புளோரா ராணுவத்தில் பணியாற்றி இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண்.
அவர்களுக்கும், இந்த ராணுவ குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தது கொள்கிறேன்.
இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இராஜாவூர் மட்டும் அல்ல. தமிழகத்திற்கே பெருமை.
மேஜர் ஜெனரல் புளோரா, இந்திய ராணுவத்தில் 38 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறார். இந்திய ராணுவத்தின் மிக பெரிய பொறுப்பை அடைந்திருக்கும் இவர், நமது நாட்டு பெண்களுக்கு ஊக்கத்தை அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
நமது ராணுவ வீர்க்களின் நலன் இவர்களின் கைகளில் தான் இருக்கிறது. நமது வீரர்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க இவர்களது பங்களிப்பு மிக முக்கியம்.
போர் மற்றும் விபத்துகளின் போது இவர்கள் வீரர்களின் உயிரை காப்பாற்ற செய்கிற சேவை போற்றுதலுக்கு உரியது.
மேஜர் ஜெனரல், 1985 இல் ராணுவத்தில் சேர்ந்து பல முக்கிய பதவிகளை வகித்து தனது உழைப்பாலும் திறமையாலும் இன்று இந்த உயர்ந்த பதவியை அடைந்துள்ளார். தொடர்ந்து அவரது சேவை ராணுவத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஒவ்வொரு ராணுவ வீரர்களுக்கும் பின்னால் உறுதுணையாக அவர்கள் குடும்பம் என்றும் இருக்கும். மேஜர் ஜெனரல் அவர்கள் குடும்பத்திற்கும் எனது நன்றி மற்றும் வாழ்தினை தெரிவித்து கொள்கிறேன்” என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் பேரூராட்சி பெண் தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு, மேஜர் ஜெனரல் புளோரா அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக விழாவுக்கு வருகை தந்த விஜய் வசந்த் எம். பி, கன்னியாகுமரி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஸ் ராஜன் ஆகியோரை, மேஜர் இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா தனது குடும்பத்தினருடன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
செய்தி: த.இ.தாகூர், குமரி மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“