/indian-express-tamil/media/media_files/55Ks13AQVUowbb9BbN7f.jpg)
Saraloor Jagan
முனைவர் கமல. செவ்வராஜ்
இம்மண்ணில் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மறைந்தோம்… என்றில்லாமல், மறைந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் உண்மையான மனிதர்கள்.
அந்த வகையில் தனது அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் 103 முறை ரத்ததானம் செய்து, இரண்டு தலைமுறையினரின் நினைவில் நீங்கா இடம்பிடித்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் குருதிக்கொடையாளி என்னும் பட்டப்பெயருடன் பிரபலமாகி வலம் வந்து கொண்டிருக்கிறார் ஒருவர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
ஆம், நாம் அனைவரும் நம்பியாக வேண்டும். பேராபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போருக்கு, தன் உடலின் உதிரத்தை தானமாகக் கொடுத்துப் பிறர் உயிர்க்காத்து வரும் சரலூர் த. ஜெகன் என்னும் உத்தமர் தான் அவர்.
ரத்தம் என்று கேட்டாலே மயக்கம் போட்டு விழுந்து விடுபவர்கள் மத்தியில் எப்படி உங்களால் இவ்வளவு முறை ரத்ததானம் செய்ய முடிந்தது என்று கேட்ட போது, “எனது 21 ஆம் வயதில், ஒரு ஏழைப்பெண்மணிக்குப் பிரசவத்தின் போது கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும், அவரது உயிரைக் காப்பாற்ற உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது என்றும் தகவல் கிடைத்தது. நான் உடனே அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்று, அப்பெண்மணிக்கு உதிரம் கொடுத்து உதவினேன். இப்படித்தான் முதல் முதலில் எனது ரத்ததானம் தொடங்கியது.
அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல், மிகவும் ஆபத்தான நிலையில் ரத்தம் தேவைபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ரத்தம் கொடுத்து உதவி வருகிறேன்.
ஒருமுறை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓர் இளம் பெண்ணிற்குப் பிரசவத்தின் போது ஆபரேஷன் செய்ய வேண்டும், அதற்கு உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது என என்னை அழைத்தார்கள். நான் ஆஸ்பத்திரியில் சென்ற போது அந்த இளம் பெண்ணின் தாய் என்னிடம் ஓடி வந்து “ஐயா எனது பிரசவத்திற்கும் நீங்கள் தான் ரத்தம் தந்து உதவினீங்க, இப்ப எனது மகள் பிரசவத்திற்கும் ரத்தம் தருவதற்கு நீங்க தான் வந்திருக்கீங்க என அழுது கொண்டே கூறினார்கள்.
இப்படி ஒரே குடும்பத்தில் இரண்டு தலைமுறைக்கு ரத்ததானம் செய்ததை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது” என தனது ரத்த தானத்தின் தொடக்கத்தை நினைவு கூர்ந்து நம்மை மெய்சிலிர்க்க வைத்தார் அவர்.
ரத்ததானத்துடன் மட்டும் நின்று விடாமல், கடந்த பல ஆண்டுகளாக தினமும் காலை ஐந்து மணி முதல் ஏழு மணிவரை, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள அரசு பள்ளி வாளாகங்கள், ரோட்டோர நிழலகங்கள், கழிவுநீர் ஒடைகள், குளங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தல் போன்ற சமூகச்சேவையும் தன்னந்தனியே தளராது செய்து வருகிறார்.
பள்ளி வளாகம், சாலையோரம், பொது இடங்கள் ஆகியவற்றில் ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளைத் தனது சொந்த செலவில் நட்டுப் பராமரித்து வருகிறார். சாலையோரங்கள், நீர்நிலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்கள், குடிகாரர்கள் பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் வீசியெறியும் பாட்டில்களைப் பொறுக்கித் தூய்மை செய்தல் ஆகிய அரியப்பணிகளையும் இடைவிடாது செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
கொடிய கொரோனா பெரும் தொற்று அனைவரையும் வீட்டிற்குள் முடக்கிய நேரத்தில், ஒருநாள் கூட இவர் வீட்டில் முடங்காமல், ஊரிலுள்ள சில நல்லுள்ளங்களின் உதவியோடு, பொருள்களை வாங்கி, தமது வீட்டில் வைத்து சமைத்து, சாலையோரத்தில் யாசகம் செய்துகொண்டிருந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டுச் சுற்றித்திரிந்தவர்கள், பராமரிப்பதற்கு ஆளின்றி தனிமையில் வாடிய முதியவர்கள் ஆகியோருக்கு தினமும் இருவேளை உணவளித்து, இரத்ததானத்தோடு, அன்னதானமும் செய்த அற்புத மனிதர்.
இளமையில் வறுமை துரத்தியதால், பத்தாம் வகுப்புக்கு மேல் படித்துப் பட்டம் பெற இயலாத இவர், இன்று கவிஞர், நாவலாசிரியர், மேடைப்பேச்சாளர், சினிமா வசனகர்த்தா, நடிகர், சமூகச்சேவகர் என்னும் பன்முக ஆளுமையோடு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே இரத்ததான விழிப்புணர்வு, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவற்றுடன் கவிதை, புதினம், கட்டுரை என பத்திற்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளைப் படைத்து வெளியிட்டு, இலக்கியப் பங்களிப்பாற்றியுள்ளதற்காக, தமிழக அரசு, இவருக்குச் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
அதோடு, இதுவரை பல்வேறு சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், இவரது இடைவிடாத அளப்பரியச் சமூக, இலக்கியச் சேவையைப் பாராட்டி அறுபதிற்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி, ஊக்கப்படுத்தியுள்ளன.
சரலூர் த.ஜெகனால் எவ்வித ஆர்ப்பரிப்பும் ஆர்ப்பாட்டமுமின்றி நடத்தப்பட்டு வந்த சமூகச்சேவை, அவரது ஊரைத்தாண்டி, ஊடகங்கள் வாயிலாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் பார்வையிலும் பட்டுள்ளது. அவர் தமது சமூக வலைதளத்தில் “அறியப்படாத அதிசய மனிதர்கள்” என்னும் தலைப்பில் “இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சமூக சேவகர் மதிப்பிற்குரிய ஐயா திரு சரலூர் ஜெகன் அவர்கள்” என ஒரு பதிவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இது தனது சேவைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்கிறார் ஜெகன் அவர்கள்.
இவரது தன்னலமற்ற சேவைக்கான அங்கீகாரம் இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதந்தோறும் நடத்தும் மங்கி பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியிலும் வரவேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட சமூக ஆர்வலர்களின் அவாவாக உள்ளது.
திக்குத் தெரியாமல் தான்தோன்றித்தனமாகத் திசைமாறிச் செல்லும் இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தக் குருதி கொடையாளிக்கு நாமும் தலைவணங்குவோம்.
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை
கன்னியாகுமரி மாவட்டம்.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.