கரீனா காபூரின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதான்!

வசதி இருந்தால் இதெல்லாம் கிடைக்கும் என்பது உண்மைதான் என்று சொன்ன கரீனா, ஆனால், இதெல்லாம் இருந்தால்தான் ஃபிட்னெஸ் கிடைக்கும் என்பதில்லை என்றார்

வசீகரன்

உடல் நலம் பேணவும் உடலை அழகாகப் பராமரிக்கவும் யாருக்குத்தான் ஆசை இல்லை? தொப்பை இல்லாத உடல், கூன் விழாத முதுகு, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி இல்லாத ஆரோக்கியம், படிகளில் மூச்சு வாங்காமல் ஏறுவதற்கான தெம்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பது, காப்பிக்குச் சர்க்கரை போட்டுக்கொள்ளவும் ஆசைப்பட்ட இனிப்பைச் சாப்பிடவும் கூடிய உடல் நிலை, டென்ஷன், எரிச்சல் இல்லாத மனநிலை, குழந்தைகளுடன் ஓடி ஆடி விளையாடும் உடல் திறன், பைக்கில் ஏறுவதற்குக் காலை எளிதாகத் தூக்கிப் போடும் அளவுக்கேனும் உடலில் லாவகம், பாகுபலியைப் போலப் பெரிய சிலையைத் தூக்க முடியாவிட்டாலும் தண்ணீர்க் குடத்தையோ வெளியூருக்குச் செல்லும்போது பெரிய பெட்டியையோ தூக்கும் வலிமை…

இதெல்லாம் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். எவ்வளவு இலகுவாக இருக்கும். ‘அதைக் கொஞ்சம் எடுத்துக் குடேன்’ என்று பிறரிடம் கேட்டு உதவிக்காக நிற்க வேண்டியதில்லை. ‘என்ன சார், இவ்வளவு சின்ன வயசிலயே மூச்சு வாங்குது?’ என்ற கேள்வியை எதிர்கொண்டு அவமானப்பட வேண்டியதில்லை. பெட்டியைத் தூக்க பயந்துகொண்டு பயணத்தைத் தவிர்க்கலாமா என்று யோசிக்க வேண்டியதில்லை. இரண்டாவது மாடியில் வீடு பார்க்கத் தயங்க வேண்டியதில்லை.

அன்றாட வாழ்வுக்கான ஃபிட்னெஸ்

உடல் திறன் அல்லது ஃபிட்னெஸ் என்பது தொழில்முறை விளையாடில் ஈடுபடுபவர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள், நடிகர் நடிகைகள் ஆகியோருக்குத்தான் முக்கியம் என்பதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. போர்க்களத்திலோ ஆடுகளத்திலோ திரைப்படத்திலோ நம் திறமையை நிரூபிப்பதற்காக அல்லது அழகாகத் தோற்றமளிப்பதற்காகத்தான் ஃபிட்னெஸ் அவசியம் என்பதல்ல.

ஓடிப்போய் பஸ்ஸைப் பிடிப்பதற்கும் அன்றாடம் படிகளில் ஏறி இறங்குவதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஃபிட்னெஸ் தேவை. ஆனால், ஃபிட்னெஸ் என்றதும் பலருக்கு ஒரு எண்ணம் மனதில் உதிக்கிறது. அதெல்லாம் வசதி படைத்தவர்களுக்குத்தான் உரியது. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் ஃபிட்னெஸைப் பெரிதாகப் பராமரிக்க முடியாது என்று நினைக்கிறார்கள். கவனமாக மேற்கொள்ளப்படும் டயட், உடற்பயிற்சி அல்லது யோகாசனப் பயிற்சி ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச வசதி தேவை என்பது அவர்கள் வாதம்.

பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவது, உடம்புக்கு என்ன தேவை என்பதை டயட் நிபுணர்களிடம் கலந்தாலோசிப்பது, அவர் சொல்லும் பரிந்துரைகளின் அடிப்படையில் உணவு சமைப்பது, ஜிம்முக்குச் செல்வது, பயிற்சியாளரை அமர்த்திக்கொள்வது ஆகியவற்றுக்குப் பணம் தேவை என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால், பண வசதிதான் உண்மையான பிரச்சினையா? நம்மில் பத்துக்கு ஐந்து பேர் தொந்தொயும் தொப்பையுமாக இருப்பதற்குக் காரணம் வறுமையா? நம்மில் பலருக்குப் படி ஏறினால் மூச்சிரைபதற்குக் காரணம், சம்பளம் போதாமையா? முறையான டயட் எடுத்துக்கொள்ள முடியாமைக்கும் வசதியின்மைதான் காரணமா?

கரீனா கூறும் வழி

அண்மையில் பாலிவுட் நடினை கரீனா கபூர் கான் ஒரு பேட்டி அளித்திருந்தார். வசதி படைத்தவர்களுக்குச் சிறப்பு உணவு, சிறப்புப் பயிற்சியாளர், ஜிம் போன்ற சிறப்பு வசதிகள் எல்லாம் கிடைக்கின்றன என்று ஒரு கருத்து நிலவுகிறதே என்று கேட்கப்பட்டது.

kareena-kapoor

வசதி இருந்தால் இதெல்லாம் கிடைக்கும் என்பது உண்மைதான் என்று சொன்ன கரீனா, ஆனால், இதெல்லாம் இருந்தால்தான் ஃபிட்னெஸ் கிடைக்கும் என்பதில்லை என்றார். “நான் வீட்டில் செய்யப்படும் எளிய உனவுகளைத்தான் எடுத்துக்கொள்கிறேன். பருப்பு, கீரை, ரொட்டி போன்றவைதான் என்னுடைய முக்கிய உணவுகள். இதைச் செய்ய சமையல் நிபுணர் யாரையும் வேலைக்கு அமர்த்த வேண்டியதில்லை. ஜிம் என்பது இன்று தெருவுக்குத் தெரு இருக்கிறது. சாதாரண உடற்பயிற்சிகளை யாரும் செய்யலாம். எளிமையான யோகாசனங்களைக் கற்க அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. இவற்றை வீட்டிலேயே செய்யலாம்” என்று சொன்ன அவர் அதன் பிறகு சொன்னதுதான் மிகவும் முக்கியமானது. “முடியாது என்று சொல்வதற்கான சாக்குகளைத் தேடும் மனதின் பழக்கத்திலிருந்து விடுபடுவதுதான் முக்கியம்” என்றார்.

சத்தியமான வார்த்தை. உணவுக் கட்டுப்பாடு, உனவில் நேர ஒழுங்கு, முறையான தூக்கம், நடைப் பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் ஆகியவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு முதல் தேவை அதற்கான மன விருப்பம். அந்த விருப்பத்தைச் செயலாக மாற்றும் உறுதி. தினசரி செய்வதற்கான ஒழுங்கும் கட்டுப்பாடும்.

நமக்கு நாமே

பொதுவாகவே மனம் சோம்பேறித்தனமானது. தொடர்ந்து ஒரு வேலையைச் செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கும். அலுவலக வேலை, பொருளாதாரத் தேவை முதலான புறக் கட்டாயங்கள் இருக்கும்போது மனதின் சோம்பலை நாம் சமாளித்து அதை மீறிப் பணிபுரிகிறோம். ஃபிட்னெஸ் போன்ற விஷயங்களில் புறக் கட்டாயங்கள் குறைவு. இத்தனை அங்குலத்துக்கு மேல் தொப்பை இருந்தால் வேலை கிடையாது என்று யாரும் சொல்வதில்லை.

மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்கினால் சோறு கிடைக்காது என்று யாரும் சொல்வதில்லை. பெட்டியைத் தூக்குவதில் சிரமப்படுபவர்கள் பயணம் செய்ய முடியாது என்று ரயில்வே துறை உத்தரவு போடுவதில்லை. ஃபிட்னெஸ் என்பது அடிப்படையில் சுய கட்டுப்பாடு சார்ந்தது.

செய்ய முடியாது என்பதற்கான காரணங்களை மனம் கண்டுபிடிக்கும். அந்தச் சோம்பலை வெல்லும் வலிமையை அதே மனதுக்கு நாம்தான் அளிக்க வேண்டும். அதை வென்றுவிட்டால் யாரும் எங்கும் எப்போதும் ஃபிட்னெஸுக்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நடிகையாகவோ, முன்னணி பேட்ஸ்மேனாகவோ, கால்பந்தாட்டக்காரராகவோ, பணக்காரராகவோ இருந்தால்தான் ஃபிட்னெஸ் பெறுவது சாத்தியம் என்பது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள மட்டுமே இது உதவும்.

கீரை, காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதற்கும் கொழுப்பு, மாவுச் சத்து நிறைந்த உணவுகளைக் குறைப்பதற்கும் வசதியா வேண்டும்? எண்ணெயில் பொறித்த பண்டங்களைத் தவிர்த்தல், இரவில் சீக்கிரமாகச் சாப்பிடுதல் என்பதையெல்லாம் கடைப்பிடிக்க நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டுமா என்ன? நடைப்பயிற்சிக்கும் மூச்சுப் பயிற்சிக்கும் ஒருவர் லட்சாதிபதியாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறதா?

மனம் கூறும் சாக்குப்போக்குகளைக் களைவோம். மனதை நல்ல விஷயங்களுக்குப் பழக்கப்படுத்துவோம். மனதை மனதால் வெல்லுவோம். உடல் திறன் நம் வசப்படும்.

பழைய மொழியாக இருந்தாலும், எப்போது பொருந்தும் இந்தப் பொன்மொழியை மறக்காமல் இருப்போம்: மனமிருந்தால் மார்க்கமுண்டு.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close