கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவையில் தயாரிக்கப்படும் மண் விளக்குகள் மற்றும் கற்களால் தயாரிக்கப்படும் விளக்குகள் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் குறிப்பாக கற்களால் செய்யப்படும் கல்கொத்தி விளக்குகள் அதிகளவு கேரளாவிற்கும், இந்த ஆண்டு ஆந்திரா மாநிலத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில் புதிய வரவாக இந்த ஆண்டு ஆமை பீடத்துடன் கூடிய கல்கொத்தி விளக்குகள் தயாரிக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய கோவை கணபதி சங்கனூர் பகுதியை சேர்ந்த கல்கொத்தி விளக்கு தயாரிப்பாளர் மகேஷ்குமார் கூறியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் கோவையில் தயாரிக்கப்படும் 2.5 அடி, 3.5 அடி மற்றும் 5.5 அடி உயரமுள்ள கல்கொத்தி விளக்குகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள பல்வேறு கோவில்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆமை பீடத்திலான கல்கொத்தி விளக்குகளை செய்து கொடுக்க அறிவுறுத்தினர். அதன்படி, ஆரம்பத்தில் ஆமை பீடத்தை உருவாக்க முயன்ற போது கல் உடைந்து கொண்டே இருந்தது.
இதையடுத்து கேரள கோயில் நிர்வாகிகள் கொடுத்த ஆலோசனை அடிப்படையில், அதனை சரியாக செய்து முடித்தோம். தற்போது வரை ஐந்து ஆமை பீட கல்கொத்தி விளக்குகள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் முறையாக ஆந்திராவை சேர்ந்த கோயில் நிர்வாகிகளும் இந்த விளக்குகளை கேட்டுள்ளனர்.” என்று கூறினார்.
பொதுவாக கல்கொத்தி விளக்குகள் கோவில்கள் மற்றும் பெரிய பங்களா வீடுகளை அலங்கரிக்கவும் வாங்கிச் செல்லப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஆமை பீட கல்கொத்தி விளக்குகள் மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“