கார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு

எப்பொழுதும் புத்த பிட்சுக்கள் , நல்ல காரியத்தை, நிறைந்த நாளாக கருதப்படும் பௌர்ணமியில் தான் ஆரம்பிப்பார்கள். பெளணர்மி நாளில் மலை உச்சியில் தீபம் ஏற்றினார்கள்

By: Updated: December 1, 2017, 11:04:05 AM

சரவணக்குமார்

“கண்டுபுடிச்சேன்… கண்டுபுடிச்சேன்…” என ‘குரு சிஷ்யன்’ பிரபு போல பாடாதது மட்டுமே பாக்கியாக இருந்தது அந்த புத்த பிட்சுக்களிடம்.

இருக்காதா பின்னே..!

உலகிற்கே ‘வெளிச்சம்’ போட்டு காட்டியிருக்கிறார்களே! அப்படி இருக்க, அதற்காக குதித்து கொண்டாட மாட்டார்களா என்ன!

ஈ.பி. கார்டை பார்த்த உடனேயே ஷாக்கடிக்கும் இன்றைய காலம் போல் அன்றைக்கு இல்லை.

சுருங்கச்சொன்னால் மின்சாரம் வருவதற்கெல்லாம் மிக முந்தைய காலகட்டம்.

அப்போதெல்லாம் மரங்களை வெட்டிப்போட்டு அதை எரியவிட்டு இரவு இருளை விரட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் எவ்வளவு நேரம் தான் எரியும். ஒரு கட்டத்தில் அணைந்துபோய் புகையை கிளப்பி மக்களுக்கு பல்வேறு உபத்திரவங்களை கொடுத்துக்கொண்டிருந்தது. வெளிச்சமும் கஞ்சத்தனமாகவே இருந்தது.

அந்த நேரத்தில் ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் போல் செயல்பட்ட புத்த பிட்சுக்கள், ஆமணக்கிலிருந்து நெய் எடுத்து விளக்கெரித்து பார்த்தனர்.

சோதனையின் முடிவில்… சக்சஸ்… சக்சஸ்.

‘ட்ராவிட்’ போல் சற்றும் அசராமல் நின்று நிதானமாய் எரிந்தபடி இருந்தது தீபம்.

ஆனாலும் பிட்சுகளிடம் ஒரு சந்தேகம் எட்டிப்பார்த்தது.

‘எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புகளையும் நம்மவர்கள் அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிப்பார்களா?’ – இப்படி அவர்கள் நினைத்ததில் தவறொன்றும் இல்லை. ஏனென்றால், புத்த பிட்சுகள் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடித்து மக்களுக்கு கொடுத்தபொழுது, அவர்கள் யாரும் அதை எளிதில் நம்பவில்லை. வெகு நாட்கள் கழித்தே ‘ஓகே’ சொன்னார்கள்.

மக்கள் நம்பவேண்டுமென்றால் முதலில் மன்னன் நம்பவேண்டும். அவர் ‘பர்மிஷன் க்ராண்டேட்’ என்று திருவாய் மலர்ந்தால், மக்களும் மண்டையை ஆட்டிவிடுவார்கள்.

புத்த பிட்சுக்கள், ‘மடலாபுரம்’ என்று அழைக்கப்பட்ட அந்த பகுதியை ஆண்டுவந்த அரசனின் அரசவைக்குள் காலடி எடுத்துவைத்தனர்.

அவர்கள் சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்ட மன்னன், “இந்த மாதிரியெல்லாம் அதை கண்டுபிடிச்சேன், இதை கண்டுபிடிச்சேன்னு நம்ம பழக்கத்தையே மாத்துற வேலையெல்லாம் செஞ்சீங்கன்னா தொலைச்சுப்போடுவேன்… தொலைச்சு…” என எச்சரித்தார்.

பிட்சுகள் கொஞ்சமும் அசரவில்லை. எவ்வளவு அடித்தாலும் தாங்குவது என்கிற எண்ணத்தோடு மன்னனிடம் மன்றாடினார்கள். அவர்களின் நச்சரிப்பை பொறுக்க முடியாத மன்னர், வேறு வழியில்லாமல் தலையை ஆட்டிவைத்தார்.

ஆனால் ஒரு கண்டிஷன்…
‘நான் சோதித்து பார்த்து திருப்தி என்றால் கன்டின்யூ, இல்லை என்றால் டிஸ்கன்டின்யூ.’

புத்த பிட்சுகள் ஒப்புக்கொண்டார்கள்.

“நீங்கபாட்டுக்கு ஊரக்கூட்டி மேடை போட்டு நெருப்பை பத்தவச்சு, அது எங்கேயாவது பரவி ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடப்போவுது. அதனால பக்கத்தில இருக்கிற மலை உச்சியில் குழியை வெட்டி ஆமணக்கு நெய்யை ஊத்தி எரிய விடுங்க…”

“அப்படியே ஆகட்டும் மன்னா” .

எப்பொழுதும் புத்த பிட்சுக்களிடம் இருக்கும் பழக்கம், நல்ல காரியத்தை, நிறைந்த நாளாக கருதப்படும் பௌர்ணமியில் தான் ஆரம்பிப்பார்கள். அவர் சொன்னபடியே ஒரு பெளணர்மி நாளில் மலை உச்சியில் தீபம் ஏற்றினார்கள். கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பின் வெளிச்சம் அந்த ஊர் முழுவதும் பரவி இருளே இல்லாமல் செய்தது.

மன்னர், புத்த பிட்சுகளின் முதுகை தட்டி ’வெரி குட்’ என பாராட்டி, ‘பேட்டன் ரைட்ஸ்’ கொடுத்துவிட்டு புறப்பட்டார்.

மக்களும் இதை சோதிக்க நினைத்து, தங்கள் வீடுகளுக்கு வெளியே தீபம் ஏற்றிவைத்து மூன்று நாட்கள் சோதித்தனர். ஒன்றும் பாதிப்பில்லை என தெரிந்ததும் ஒகே ரைட் என கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
கார்காலமும், முன்பனி காலமும் கைகோர்த்து களவு வாழ்க்கைக்கு திட்டமிடும் இந்த காலத்தில் தான் அவர்கள் இந்த சோதனையை செய்தார்கள். ‘கார்’ என்றால் இருள் என்பது பொருள். தாங்கள் கண்டுபிடித்த இந்த நெய்யை கொண்டு இருளை துலக்குவதால், கார்த்துல மாதம் என அழைக்கப்பட்ட இம்மாதம், பின்னாட்களில் வழி தவறிய குழந்தையாய் கார்த்திகை மாதமாகியது.

புராணப்படி கார்த்திகை தீபத்திற்கு பல கதைகள் சொல்லப்பட்டாலும் மேலே சொல்லப்பட்டவை, போகிற போக்கில் சொல்லப்பட்ட கட்டுக்கதை அல்ல. வரலாற்று ஆசிரியர்கள் கூறியவை தான். பிட்சுகள் தீபம் ஏற்றிய இடமே திருவண்ணாமலை எனவும் கூறுகிறார்கள். அந்த மன்னரின் பெயர் போன்ற விவரங்கள் சரிவர கிடைக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் கார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு என்பது வரலாற்று ஆய்வாளர்களின் அசைக்க முடியாத கூற்று.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Karthikai deepam the buddhists innovation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X