/indian-express-tamil/media/media_files/OTS3AVkkdOP0sDQrXsyB.jpg)
கருப்பு கவுனி அரிசியும் ஆரோக்கிய உணவு முறையும்!
சமீபத்திய புள்ளிவிவரங்கள் இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரிப்பதைக் காட்டுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ஒரு வருடத்திற்கு 17.1 மில்லியன் மக்கள் இதயம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்படுவது தெரிய வருகிறது. உலகில் ஒவ்வொரு 40 நொடிக்கும் 5பேர் உயிரிழந்தால் அதில் ஒருவர் இதய பிரச்னையால் உயிரிழப்பதும் ஆய்வறிக்கையில் தெரிய வருகிறது.
இதய நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய பாரம்பரிய அரிசி வகைதான் கருப்பு கவுனி அரிசி. தொடர் மன அழுத்தம், உணவு முறை, முறையான உடற்பயிற்சி எதுவும் இல்லாததாலும், பரம்பரை பிரச்னைகளாலும் இதய நோய் வர வாய்ப்பு உள்ளது என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
அப்படி என்ன இந்த அரிசியில் உள்ளது? அதற்கான காரணங்கள் குறித்தும், இதன் ஆரோக்கிய நற்பலன்கள் பற்றியும் இக்கட்டுரையில் மேலும் விரிவாக காண்போம்.
கருப்பு கவுனி அரிசி, இந்தியாவில் தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய அரிசி வகையாகும். இதன் தனித்துவமான அடர் நிறமானது, சமைத்தவுடன் ஊதா நிறமாக மாறிவிடுவது இதன் தனிச்சிறப்பாகும்.
பல்வேறு ஊட்டச்சத்துகள் அதிகமாக இருப்பதன் காரணமாகவே கருப்பு கவுனி அரிசியை அரிசிகளின் ராஜா என்று வர்ணிக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் சீன மன்னர்கள், அரச குடும்பத்தினர், அமைச்சர்கள், பெரு வணிகர்கள் மட்டும் இந்த கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்தி வந்ததாகவும், பொதுமக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
கலோரிகள் : 350 kcal
கார்போஹைட்ரேட்டுகள் : 75g
புரதம் : 8.5g
கொழுப்பு : 2g
நார்ச்சத்து : 4.9g
இரும்புச்சத்து : 3 mg (தினசரி தேவையில் இது 13%)
மெக்னீசியம் : 60 mg (தினசரி தேவையில் இது 15%)
வைட்டமின் E : 1.2 mg (தினசரி தேவையில் இது 6%)
ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் : அதிக அளவு அந்தோசயினின் என்கிற சேர்மம் உள்ளது.
மற்ற அரிசிகளைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. கருப்பு கவுனி அரிசியில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக அந்தோசயினின் என்கிற சேர்மம் அதற்கே உரிய தனித்துவமான அடர் நிறத்தை அளிக்கிறது. அவை ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகளையும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு குணநலன்களையும் கொண்டுள்ளன என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
கருப்பு கவுனி அரிசியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரி சூழலையும் ஊக்குவிக்கிறது. கூடுதலாக, இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் மெதுவாக வெளியிடப்படுவதில் உதவுகிறது; அதனால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும், நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. செரிமான ஆரோக்கியத்தை இயற்கையாகவே ஆதரிக்க கருப்பு கவுனி அரிசி ஒரு சிறந்த வழியாகும்.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றின் கலவையானது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது. கரையக்கூடிய நார்ச்சத்தானது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது; அதே நேரத்தில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் LDL கொழுப்பின் ஆக்ஸிடேஷனைத் தடுக்கின்றன. இதனால் இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் கருப்பு கவுனி அரிசி குறைக்கின்றது. இந்த அரிசியை அன்றாட உணவில் சேர்ப்பது இதயம் தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.