கருவேப்பிலை சாப்பிடுவதால், இதனால் தலை முடி வளரும், கண்பார்வை தெளிவடையும். இந்நிலையில் பாரம்பரிய முறையில் கருவேப்பிலை சட்னி எப்படி அரைப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை- 2 கைப்பிடி
சமையல் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் -10
சின்ன வெங்காயம் – 15
தேங்காய் துருவல்- அரை கப்
வர மிளகாய்- 4
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
தேவையான அளவு எண்ணெய்
கடுகு- அரை ஸ்பூன்
வரமிளகாய்- 1
செய்முறை : முதலில் 2 கைப்பிடி அளவிற்கு கை நிறைய கருவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து கழுவி உலர விட்டு எடுத்து வைத்துகொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தோலுரித்து சுத்தம் செய்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் சட்னியை வைக்க வேண்டும்.
ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு அதில் உளுந்து மற்றும் கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துகொள்ளுங்கள். அதிலேயே மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு தோல் உரித்து வைத்துள்ள பூண்டு மற்றும் தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துகொள்ள சின்ன வெங்காயத்தை அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
ஓரளவுக்கு நன்கு சுருள வதங்கி வந்த பின்பு காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் நீக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இத்துடன் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு துருவிய தேங்காய் அல்லது தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்குங்கள். பின்பு வறுத்த பருப்பையும், கடைசியாக நீங்கள் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 5 நிமிடம் வதக்கிய பின்பு நிறம் மாறி வர ஆரம்பிக்கும்.
பின்னர் ஒரு மிக்ஸியில் ஆறிய பொருட்களை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு தாளிக்க அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொறியவிடுங்கள். பின்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு வர மிளகாயை ஒன்றிரண்டாக கிள்ளி தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறி பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“