ஒரு முறை, இப்படி கீரை வடை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு - 2 கப்
பசலை கீரை - 1/2 கொத்து
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 12
அசாஃபோடிடா அல்லது பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1/2 அங்குலம்
கறிவேப்பிலை - 2
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய்
செய்முறை
முதலில் 2 கப் உளுந்தம் பருப்பு எடுத்து அவற்றை அவற்றை 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். அவை நன்கு ஊறி வந்த பிறகு அவற்றை ஒரு கிரைண்டரில் இட்டு சொட்டு தண்ணீர் சேர்க்காமல் நொறுநொறுப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பெரிய பாத்திரம் எடுத்து அவற்றில் வடை சுடுவதற்கான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். இதற்கிடையில், நம்மிடம் உள்ள கீரையை நன்கு அலசி ஆய்ந்து, பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒருவேளை அவற்றில் தண்ணீர் இருந்தால் பேப்பர் டவலில் இட்டு உறிஞ்ச விடவும்.
இப்போது காரத்திற்கேற்ப பச்சை மிளகாய், தேவையான அளவு கருவேப்பிலை, இஞ்சி என அனைத்தையும் எடுத்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை முன்பு தயாரித்து வைத்துள்ள வடை மாவில் தூவ வேண்டும். பிறகு பெருங்காயம், மிளகு, சீரகம், பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரை, மற்றும் சுவைக்கேற்ப உப்பு முதலியவற்றை சேர்த்து நன்கு பிசையவும்.
பின்னர் ஒரு இலையை எடுத்து அதை தண்ணீர் இட்டு கழுவி அதில் வட்டமாக வடையை தட்டி முன்னர் கொதிக்கவைத்துள்ள எண்ணெய்யில் ஒன்றன் பின் ஒன்றாக இடவும். அல்லது உங்கள் கையை தண்ணீரால் கழுவிய பிறகு அதில் கூட வட்டமாக வடையை தட்டி எண்ணெயில் இட்டு எடுக்கலாம். கீரை வடை நன்கு மொறுமொறுப்பாக வெந்த பிறகு தேங்காய் சட்டினிகளுடன் சேர்த்து பரிமாறலாம்.