சிறுநீரக கற்கள் பிரச்னை அதிகரித்து வரும் ஒரு முக்கிய பிரச்னையாக இருக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவானால், மிகப்பெரிய அளவில் தாங்க முடியாத அளவு வலியைக் கொடுக்கும். ஆபரேஷன் செய்யாமல் சிறுநீரகக் கற்கள் வெளியே வருவதற்கு சிறுநீரகவியல் மருத்துவர்கள் சிகிச்சைகள் அளிக்கிறார்கள். இருப்பினும், நம்முடைய வீட்டு அருகில் இருக்கும் கீழாநெல்லி கீரை சிறுநீரக கற்களை உடைக்கும் சக்தி கொண்டது. சிறு நீரகத்தில் 10 மி.மீ அளவுக்குள் இருக்கும் சிறுநீரகக் கற்களை இந்த கீழாநெல்லி கீரை உடைக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
கீழாநெல்லி என்றாலே பலரும் கல்லீரல் பாதிப்பால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை குணப்படுத்துவதற்கான மருந்து என்று கூறுகிறார்கள். ஆனால், கீழா நெல்லியை வைத்து கிட்னி தொடர்பாகத்தான் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
நம்ம ஊர்களில் ரொம்ப சாதாரணமாகக் கிடைக்கும் கீழா நெல்லியின் அறிவியல் பெயர் பில்லன்தஸ் நிருரி என்று அழைக்கப்படுகிறது. இது ‘சான்கா பீட்ரா’ (Chanca Piedra) என்ற வகையில் அதிக அளவு சிறுநீரக கற்கள் தொடர்பாக அதிக அளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளில் கீழாநெல்லியை சிறுநீரக கற்களை உடைப்பவர் என்று கூறுகின்றனர்.
அதிலும், சிறுநீரகக் கல் 10 மி.மீ அளவுக்கு குறைவாக இருந்தால் கீழாநெல்லி அதை உடைப்பதில் நன்றாக செயல்படுகிறது. சிறுநீரகக் கற்களை 4 வகைகளாகக் கூறுகிறார்கள். 1.கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் 2.கால்சியம் பாஸ்பேட் கற்கள், 3. யூரிக் ஆசிட் கற்கள், 4. சிஸ்டைன் கற்கள் என்று கூறுகின்றனர்.
இதில் கீழாநெல்லி ரத்தத்தில் கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கிறது. இந்த பண்பினால், சிறுநீரகக் கற்களை உடைக்கிறது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
மேலும், கீழா நெல்லி, முதலில் சிறுநீரகக் கற்களை உடைக்கிறது, பித்தப்பை கற்களை சரி செய்கிறது, கால் பெருவிரல் வீக்கத்தை சரி செய்கிறது, ஆனால், மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதில் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் குறைவு என்று கூறுகிறார். மேலும், ஹெப்படைட் பி என்ற கொடிய வைரஸ் பாதிபால் உருவாகும் மஞ்சள் காமாலை வராமல் தடுக்க தடுப்பூசிகள் இருப்பதாக டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
மேலும், இந்த கீழாநெல்லியைப் பறித்து, நன்றாகக் கழுவிய பிறகு தயிரில் போட்டு அதனுடன் சீரகம் சிறிது அளவு போட்டு மிக்ஸியில் அடித்து வெயில் காலங்களில் குடிக்கலாம். இது சிறுநீர் எளிதாகப் போக உதவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும், சிறுநீரகக் கற்களை உடைக்கவும் உதவும் என்கிறார்.
அதே போல, கீழாநெல்லியில் அறுசுவைகளில் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு ஆகிய 4 சுவைகள் உள்ளது. இந்த கீழாநெல்லி கீரையை, பொன்னாங்கண்ணி, கரிசாலை, மூக்கிரட்டை ஆகிய கீரைகளுடன் சேர்த்து சின்ன வெங்காயத்துடன் கலவை கீரையாக பொரியல் செய்து சாப்பிடலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
அதே போல, கீழாநெல்லியை கடுக்காய், மிளகு உடன் சேர்த்து அரைத்து சாப்பிடலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.